புதுடெல்லி: உணவுப் பொருள் பாக்கெட்டுகளில், என்னென்ன விபரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டுமென்ற புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது எஃப்எஸ்எஸ்ஏஐ எனப்படும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம்.
புதிய விதிமுறைகளின்படி, உணவு காலாவதியாகும் தேதி கட்டாயம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் மற்றும் இத்தனை நாட்கள் வரை பாதுகாப்பானது என்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கக் கூடாது.
மேலும், படிக்கத்தக்க பெரிய எழுத்தில், அந்த உணவில் என்னென்ன பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதைக் குறிப்பிடுவதோடு, அந்த உணவு சைவமா? அல்லது அசைவமா? என்பதையும் குறியீட்டின் மூலம் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
இந்தப் புதிய விதிமுறைகள் அனைத்தும், 2022ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாக்கெட்டில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் 18 வயதிற்கு குறைந்தவர்கள் யாரும் பணியாற்றவில்லை என்பதையும் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
மேலும், ரெஸ்டாரண்டுகள் மற்றும் இ-காமர்ஸ் உணவு வணிகத்தை நடத்துபவர்களுக்கும் தனியான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதேசமயம், பாக்கெட் மற்றும் லேபிளில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்த மறுஆய்வு நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.