நரசபுரா, கர்நாடகா
கர்நாடக மாநிலத்தில் உள்ள விஸ்டிரான் நிறுவன ஐ போன் தொழிற்சாலை வன்முறையில் ஏற்பட்ட இழப்பு ரூ.437 கோடியில் இருந்து ரூ.52 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள நரசபுரா பகுதியில் விஸ்டிரான் என்னும் தாய்வான் நிறுவனம் ஐபோன் உற்பத்தி செய்து வந்தது. அங்கு பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்குக் கடந்த 8 மாதங்களாக ஊதியம் வழங்காததால் தொழிற்சங்கங்கள் நிர்வாகத்திடம் பல முறை பேச்சு வார்த்தை நடத்தின, ஆனால் இந்த பேச்சு வார்த்தைகளால் எவ்வித பயனும் ஏற்படாததால் தொழிலாளர்கள் ஆத்திரம் அடைந்தனர்.
தொழிற்சாலைக்குள் புகுந்த தொழிலாளர்கள் நிறுவனத்தில் இருந்த இயந்திரங்கள், ஐபோன் பாகங்கள், அங்கிருந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அடித்து நொறுக்கித் தீயிட்டுக் கொளுத்தியதாக தகவல்கள் வெளியாகின. காவல்துறையினர் விரைந்து வந்து தடியடி நடத்தி ஆர்ப்பாட்டம் செய்தோரைக் கலைத்துள்ளனர். இந்த வன்முறை தாக்குதலால் தொழிற்சாலையில் ரூ.437 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிறுவனத் தலைவர் பிரசாந்த் தெரிவிக்கையில் அலுவலக மற்றும் தொழிற்சாலை இயந்திரங்கள் ஐபோன் பாகங்கள், என ரூ. 412.5 கோடி அளவில் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதைத் தவிர உள்கட்டமைப்புக்கள் ரூ.10 கோடி அளவில் சேதம் அடைந்துள்ளதாகவும், கார்கள் மற்றும் வாகனங்கள் ரூ.60 லட்சம் அளவில் சேதமடைந்துள்ளதாகவும் இதைத் தவிர ரூ.1.5 கோடி மதிப்பிலான பொருட்கள் திருடு போனதாகத் தெரிவித்திருந்தார்
தற்போது அந்த நிறுவனத்தின் மற்றொரு மூத்த அதிகாரி இந்த சேதம் தவறாகக் கணக்கு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தற்போது மொத்த இழப்பு ரூ.52 கோடி அளவில் ஏற்பட்டிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே காப்பீட்டு நிறுவனம் வந்து மதிப்பீடு செய்த போது இழப்பின் மதிப்பு ரூ. 437 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது., இவ்வாறு மாறியது குறித்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் பெயர் தெரிவிக்க விரும்பாத அதிகாரிகள் சிலர், “வெஸ்டிரான் நிறுவனம் பெங்களூரு மற்றும் கோலார் பகுதிகளில் ஐபோன் தொழிற்சாலைகளை பெரும் அளவில் நடத்திக் கொண்டு உள்ளன. ஐ போன் உரிமையாளரான ஆப்பிள் நிறுவனம் மொத்தம் மூன்று பேருக்கு ஐபோன் தயாரிக்க ஒப்பந்தம் அளித்துள்ளன. ஊதியம், தொழிலாளர் நலம் உள்ளிட்டவற்றை சரியாக கவனிக்காத நிறுவனங்கள் சில ஏற்கனவே ஐ போன் தயாரிக்கும் உரிமத்தை இழந்துள்ளன.
எனவே இந்த விவகாரத்தை அதிகம் பெரிதாக்க விஸ்டிரான் நிறுவனம் விரும்பவில்லை. அதிக அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் காட்டினால் வன்முறையும் அதிக அளவில் நிகழ்ந்துள்ளதாகத் தெரிய வரும். இதனால் ஐபோன் ஒப்பந்தத்தை ஆப்பிள் நிறுவனம் ரத்து செய்து மற்ற நிறுவனங்களுக்கு அளிக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த இழப்;பு குறைத்துக் காட்டப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளனர்.