சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது அதிமுக அரசு தொடர்ந்த அனைத்து அவதூறு வழக்குகளையும் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, முன்னாள் ஆளுநர் ரோசய்யா மீது பல்வேறு விமர்சனங்களை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன் வைத்தார். லஞ்சம் பெற்றுக் கொண்டு துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.
இதையடுத்து, ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது 4 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இதை எதிர்த்து ஈவிகேஎஸ் தரப்பு நீதிமன்றம் சென்றது. வழக்கு விசாரணைக்கு பிறகு, அவர் மீது போடப்பட்டிருந்த 4 அவதூறு வழக்குகளையும் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
அரசு நிர்வாகத்துக்கு எதிராக கருத்துகளை தெரிவிக்காத போது அரசு வழக்கு தொடர முடியாது என்று நீதிமன்றம் தமது உத்தரவில் தெரிவித்து உள்ளது. மேலும் அவதூறு வழக்கு தொடர அனுமதி அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் உரிய உடைமுறைகள் பின்பற்றவில்லை என்று கூறி 4 வழக்குகளையும் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.