அசாம்:
அசாமில் வெளிநாட்டவர் என்று அறிவிக்கப்பட்ட 104 வயது முதியவர் உயிரிழந்தார்.
தெற்கு அசாமின் கச்சார் மாவட்டத்தை சேர்ந்த 104 வயது முதியவரை பங்களாதேஷிலிருந்து வந்த வெளிநாட்டவர் என்று தெரிவித்து 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார், அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதைப்பற்றி அவருடைய மகள் நியூதி தாஸ் தெரிவித்துள்ளதாவது: சந்திரதர் தாஸ் என்னுடைய தந்தை, அவருக்கு பல ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லை, பல மாதங்களாக சரியான ஆகாரம் உட்கொள்ளாத அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணி அளவில் உயிரிழந்தார் என்று தெரிவித்துள்ளார்.
அவர் இந்தியாவைச் சார்ந்தவர் இல்லை பங்களாதேஷில் இருந்து வந்தவர் என்ற அறிவிப்பு முதலில் வந்த போது, எங்களுக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை அப்போதும் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் தான் இருந்தது, பல ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்து வந்த பிறகு அவரது குடியுரிமை சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது என்பதை நம்பமுடியவில்லை, உடல்நிலை சரியில்லாத நிலையிலும் இது எவ்வாறு நடந்தது என்பதை பலமுறை நினைத்து அவர் மனச்சோர்வடைந்தார்.
இருப்பினும் அவர் தனது அனைத்து பிரச்சனைகளையும் பிரதமர் நரேந்திர மோடி தீர்த்து வைப்பார் என்று எப்போதும் தெரிவிப்பார், ஆனாலும் அவருக்கு நியாயம் கிடைக்கவில்லை, அவரை இந்திய நாட்டின் குடிமகன் அல்ல என்று தெரிவிக்கப்பட்டதால் அந்த வலியிலேயே அவர் உயிரிழந்தார் என்று அவருடைய மகள் தெரிவித்துள்ளார்.
சந்திரதர் தாசின் ஆலோசகராக இருந்த வழக்கறிஞரான செளமன் சவுதரி இதைப்பற்றி தெரிவித்துள்ளதாவது: ஜனவரி 2018 ஆம் ஆண்டு சந்திரதர் தாசை வெளிநாட்டவர் என்று அறிவித்தனர், அப்போது அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் நீதிமன்றத்தில் ஆஜராக தவறினார்.
மேலும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று சந்திரதர் தாஸ் கோரிக்கை வைத்திருந்தார், ஆனால் மருத்துவ சான்றிதழ் இல்லை என்று காரணத்தால் நீதிமன்றம் அவருடைய இந்த கோரிக்கையை நிராகரித்தது, இதைத்தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார், அவர் படிக்காதவர் வயதானவர் மற்றும் செயல்முறை தெரியாதவர் என்ற காரணத்தால் வெளிநாட்டவர் என்று அறிவிக்கப்பட்டார், இது மிகவும் தவறான செயல் என்று வழக்கறிஞர் செளமன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.