புதுடெல்லி: முகக்கவசத்திற்கு இந்தியாவில் தொடக்கத்தில் பற்றாக்குறை நிலவிய நிலையில், தற்போது அளவுக்கதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு சந்தையில் குவிந்துள்ளன.
இதனால், அதன் உற்பத்தியில் ஈடுபட்ட நிறுவனங்கள் பல மூடும் நிலையில் உள்ளன. தற்போதைய நிலையில், N95 முகக் கவசங்கள் உள்ளிட்ட பல முகக்கவசங்கள் தேங்கிக் கிடப்பதாக கூறப்படுகிறது.
இந்த தேக்கத்தால், அத்தொழிலில் ஈடுபட்ட 50% நிறுவனங்கள் மூடும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. சந்தையில் சரியான நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படாமை, உள்நாட்டில் நிலவும் குறைந்தளவு தேவை மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் போன்றவையே இவற்றுக்கு காரணம் என்று உற்பத்தியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதேசமயம், முகக் கவசங்களுக்கு தொடக்கத்தில் இருந்த தட்டுப்பாட்டின் காரணமாக, பல புதிய நிறுவனங்கள் உற்பத்தியில் இறங்கின. இதனால், ஆரம்பகட்ட நிலவரம் அப்படியே தலைகீழாக மாறி, இன்று தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.