புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தை ஏலம் எடுக்கும் நடவடிக்கையில், புதிய வரவாக அமெரிக்காவின் இன்டெரப்ஸ் இன்க் என்ற நிறுவனம் நுழைந்துள்ளது.

இந்தப் போட்டியில், ஏற்கனவே, டாடா குழுமம் மற்றும் ஏர் இந்தியாவின் 209 ஊழியர்கள் அடங்கிய குழு உள்ளிட்டவர்கள் உள்ளனர்.

இன்டெரப்ஸ் இன்க் என்ற நிறுவனம், அமெரிக்க இந்தியர்களால் நடத்தப்படுவதாகும். அதன் தலைவராக இருப்பவர் லக்ஷ்மி பிரசாத். இந்த நிறுவனம், போட்டியில் குதித்துள்ளதன் மூலம், ஏர் இந்தியா ஏல நடவடிக்கையில் புதிய உற்சாகம் தொற்றிக் கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

லக்ஷ்மி பிரசாத் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “ஏர் இந்தியா நிறுவனத்தை ஏலம் எடுப்பதற்கான எங்கள் விருப்பத்தை சமர்ப்பித்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களின் வரவு ஆச்சர்யகரமான ஒன்றாக இருக்கலாம்.

எங்கள் தாய் இந்தியாவின் ஒரு பெயர்பெற்ற விமான நிறுவனத்தின் பெருமையைக் காப்பாற்றவும், அதன் ஊழியர்களின் தொடர்ந்த நல்வாழ்வை உறுதிசெய்யவும் நாங்கள் இந்த முடிவை மேற்கொண்டுள்ளோம்” என்றுள்ளார் அவர்.