சென்னை: ஐஐடி-யைத் தொடர்ந்து கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும் 2 மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அங்குள்ள மாணவர்களுக்கு சோதனை நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மத்தியஅரசின் வழிகாட்டுதலின்படி உயர்கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை ஐஐடி கொரோனா கிளஸ்டராக மாறியுள்ளது. அங்கு 104 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதற்கு மாணவர்களின் மெத்தனமே காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொரோனா அறிகுறி உறுதிசெய்யப்பட்டுள்ளது. அங்குள்ள 2 மாணவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில் அனைத்து மாணவர்களுக்கும் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிண்டி பொறியியல் கல்லூரி முதல்வர் நடராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.
கல்வி நிறுவனங்கள் இறுதியாண்டு மாணாக்கர்களுக்கா திறக்கப்பட்டுள்ள நிலையில், தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், கொரோனா வழிகாட்டுதலின்படி, பொதுமக்களும் முக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பதாலும், தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.