சென்னை: ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் பொதுமக்களை அனுமதிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் சென்னை ஆட்சியர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா வசித்து வந்த போயஸ்கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்ற தமிழக அரசு அரசாணை வெளியிட்டு அதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கியது.
ஆனால், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோர் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஜெயலலிதா வீட்டை நினைவிடமாக மாற்ற எந்த தடையும் இல்லை என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை தொடர்ந்து முதற்கட்டமாக ஜெயலலிதா இல்லத்தை அளவீடும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் தலைமையிலான அதிகாரிகள் ஜெயலலிதா இல்லத்தை ஆய்வு செய்தனர். தொடர்ந்து இன்று காலை சென்னை ஆட்சியர் சீத்தாலட்சுமி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
அப்போது ஜெயலலிதா இல்லத்தை பொதுமக்கள் பார்க்க என்னென்ன ஏற்பாடுகளை செய்யலாம் என்று ஆலோசித்தாக தெரிகிறது. ஜெயலலிதா புகைப்படங்கள் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்களை பார்வைக்கு வைப்பது, ஜெயலலிதா இல்லத்தில் மார்பளவு கொண்ட வெண்கல சிலை அமைப்பது தொடர்பாகவும் அப்போது அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.