புதுடெல்லி: இந்திய அணியின் பீல்டிங் இதேநிலையில் தொடர்ந்தால், அடுத்த டி-20 உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் பெறுவது மிகக் கடினம் என்று எச்சரித்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப்.

இவர், பீல்டிங் செய்வதற்கு பெயர்பெற்று விளங்கியவர் என்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.

சமீபத்தில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த டி-20 தொடரில், இந்திய அணியின் பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. பல கேட்சுகள் தவறவிடப்பட்டன. அதனாலேயே, ஆஸ்திரேலிய அணி பெரிய ரன்களை எட்டியது.

தற்போது கருத்து கூறியுள்ள முகமது கைஃப், “பல கேட்சுகள் தவறவிடப்படல், மோசமாக பீல்டிங் செய்தல் போன்றவை, ஆட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க முடியாது. இந்திய அணியினர் இந்த தவறுகளை மிகவும் அதிகமாக செய்கிறார்கள்.

அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை டி-20 தொடரை இந்திய அணி வெல்ல வேண்டுமெனில், தனது பீல்டிங் திறனை நல்லமுறையில் மேம்படுத்துவது மிகவும் அவசியம். இல்லையெனில், முக்கியமானப் போட்டிகளை நமது அணி நிச்சயம் இழக்கும்.

இந்திய அணியில் நிறைய இளம் பவுலர்கள் உள்ளனர். எனவே, கேட்சுகள் அதிகம் தவறவிடப்படுகையில், அவர்களின் நிலைமை மோசமாகும். அவர்கள் எதையும் சொல்லமாட்டார்கள். ஆனால், ஒரு ஆட்டம் அப்படியாக இருத்தல் கூடாது. பீல்டிங் பயிற்சியில் அதிக கவனம் செலுத்த வேண்டும்” என்றுள்ளார் முகமது கைஃப்.

 

[youtube-feed feed=1]