பெங்களூரு: கர்நாடகாவில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே பசுவதை தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது.
எதிர்கட்சிகளின் கடும் அமளிகளுக்கு இடையே கர்நாடக சட்டசபையில் இன்று பசுவதை தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. முன்னதாக அவை கூடியதும் அதற்கான மசோதாவினை கால்நடை அமைச்சர் பிரபு சவுஹான் தாக்கல் செய்தார்.
இதையடுத்து காங்கிரஸ் பேரவைத் தலைவர் சித்தராமையா, மதச்சார்பற்ற ஜனதா தள பேரவைத் தலைவர் குமாரசாமி ஆகியோர் அவையின் மையப்பகுதிக்கு வந்து சென்று கூச்சலிட்டனர்.
அப்போது அவர்கள் ஜனநாயகத்தை மீறும் செயல் என்று கூறி அமளியில் ஈடுபட்டனர். ஆனால் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டினை சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே கடுமையாக மறுத்தார். சபாநாயகரின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
இதையடுத்து, மசோதா அவையில் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, பெங்களூரில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் இந்த விவகாரம் பற்றி ஆலோசிக்கப்பட்டது.