சென்னை:  நீதிமன்றம், நீதிபதிகளை விமர்சித்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கர்ணன் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக அவதூறு வீடியோக்களை வெளியிட்டிருந்தார்.  இது தொடர்பாக அவரை கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அவரை கைது செய்வதில் மெத்தனம் காட்டியதால், கர்ணனை ஏன் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியதுடன், உடனே கைது செய்ய உத்தரவிட்டனர்.
இதையடுத்து,  நீதிபதி கர்ணன் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு, சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனால், சிறையில் அவருக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, நேற்று அவரை சிறை அதிகாரிகள், சென்னை  ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. அதில், . கர்ணனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் 12 பேர் கொண்ட சிறப்பு மருத்துவக்குழு அவரது உடலை கண்காணித்து வருவதாகவும் சிறைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.