சென்னை: சாலைகள் சரிவரி பராமரிக்கப்படாததால், சிறுமழைக்கே சென்னையில் உள்ள பெரும்பாலான சாலைகள் குண்டும்குழியாக மாறி தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த சாலையில் உள்ள பள்ளத்தில் முதியவர் ஒருவர் விழுந்து உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆனால், இதை மாநகராட்சி மறுத்துள்ள நிலையில், சென்னையில் தேங்கியுள்ள மழைநீரில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்நதுள்ளது.

சென்னை கோடம்பாக்கம், மேம்பாலம் அருகே இருக்கும் சாலையில் இருந்த மழை நீர் பள்ளத்தில் தவறி விழுந்து ஓட்டுநர் நரசிம்மன் என்பவர்  உயிரிழந்தார். இதுகுறித்து  தகவல் அறிந்து வந்த காவல்துறையினர்,  அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது அநத் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநகராட்சியும், மாநில அரசும், மழைகாலம் தொடங்குவதற்கு முன்னே சாலைகளை தரமான முறையில் சீரமைத்து, மழைநீர் வடிகால்களையும் தூர் வாரி இருந்தால், சாலைகளில் மழைநீர் தேங்கவும், போக்குவரத்து பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டிருக்காது.

ஆனால், அரசு மற்றும் அதிகாரிகளின் மெத்தனத்தால், சாலைகள் குண்டும் குழியுமாக மாறியிருப்பதுடன், உயிர் பலிகளையும் வாங்கி வருகிறது.

ஏற்கனவே கடந்த வாரம், நொளம்பூரில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து தாய், மகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது கோடம்பாக்கம்  நரசிம்மனின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால்,  நரசிம்மன் சாலை பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவத்துக்கு சென்னை மாநகராட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. நரசிம்மன் பள்ளத்தில் விழுந்ததால் உயிரிழக்கவில்லை என்றும் அவரது மரணத்தில் வேறு காரணம் இருக்கக்கூடும் என்றும் விளக்கம் அளித்துள்ளது.