சென்னை: தமிழகத்தில் நிவர் புயலால் கடலூர் உள்பட கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட வெள்ளச் சேதங்களை கடந்த 2 நாட்களாக பார்வையிட்ட மத்திய குழுவினர், இன்று தலைமைச்செயலகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
வங்கக்கடலில் கடந்த மாதம் 24–ந் தேதி உருவான ‘நிவர்’ புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் கனமழை பெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததுடன் ஏராளமான பயிர்களும் சேதம் அடைந்தன. இந்த புயல் பாதிப்பு அடங்குவதற்குள் அடுத்ததாக ‘புரெவி’ புயல் உருவானது. புயல் காரணமாக, கடலூர், நாகை, மயிலாடுதுறை, சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து விட்டுவிட்டு கனமழை பெய்ததால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் இன்னும் வெள்ளநீர் வடியவில்லை. ஏராளமான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. அரசு நிவாரணம் வழங்க பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.‘
இதையடுத்து, தமிழகத்தில் புயல் சேதங்களை பார்வையிட, மத்தியஅரசு சார்பில், மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் அஷூதோஷ் அக்னிஹோத்ரி தலைமையில் , மத்திய ஊரக வளர்ச்சி இயக்குநர் தரம்வீர் ஜா, மத்திய மின்சார அதிகாரத்தின் துணை இயக்குநர் ஓ.பி. சுமன், மத்திய மீன்வளத் துறை ஆணை பால் பாண்டியன், மத்திய நிதி அமைச்சகத்தின் துணை இயக்குநர் (செலவினம்) அமித் குமார், மத்திய வேளாண் அமைச்சகத்தின் எண்ணெய் வித்துகள் வளர்ச்சி இயக்குநர் மனோகரன், மத்திய நீர் ஆணைய கண்காணிப்பு இயக்குநர் ஜெ.ஹர்ஷா, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் மண்டல அலுவலர் ரணன்ஜெய்சிங் கொண்ட குழுவினர் தமிழகம் வந்தனர். மத்திய குழுவினர் 2 பிரிவாக சென்று வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டனர். ஒரு குழுவினரை வேளாண்மை துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி அழைத்து சென்று வெள்ள சேத பகுதிகளை காண்பித்தார். மற்றொரு குழுவினர் பொதுப்பணித் துறை முதன்மை செயலாளர் மணிவாசன் வழிகாட்டுதல்படி காசிமேடு, எண்ணூர், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் வெள்ளசேதங்களை பார்வையிட்டனர். அதன் பிறகு மத்தியக்குழுவினர் நேற்றிரவு சென்னை திரும்பினார்கள்.அவர்கள் கடந்த 2 நாட்களாக சென்னை, கடலூர் உள்பட பல மாவட்டங்களில் ஆய்வு செய்தனர். புயல் வெள்ளச் சேதங்களை பார்வையிட்டனர். சென்னையில், வேளச்சேரி ராம்நகர், பள்ளிக்கரணை, செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், பகுதிகளையும் ஆய்வு செய்தனர்.
ஆய்வை முடித்துவிட்டு சென்னை திரும்பிய மத்திய குழுவினர், இன்று காலை தலைமை செயலகம் வந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்கள். அங்குள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தின் 10-வது மாடியில் உள்ள கூட்டரங்கில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது மழை சேதங்கள் குறித்து விவாதித்தனர். ஏராளமான பயிர்கள் நீரில் மூழ்கி கிடப்பதால், மழை வடிந்த பிறகு முழுமையாக சேதங்களை கணக்கிட்டு தரும்படியும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் மத்தியக்குழுவினர் கேட்டுக் கொண்டனர்.
இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்ட சேத விவரப்பட்டியலை மத்தியக் குழுவினரிடம் வழங்கினார். அதைப் பெற்றுக்கொண்ட மத்தியக்குழுவினர் மத்திய அரசிடம் சமர்ப்பிப்பதாக தெரிவித்தனர்.
மத்தியக்குழுவினர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு தமிழக அரசுக்கு உரிய வெள்ள நிவாரண நிதியை ஒதுக்கும் என தெரிகிறது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், வருவாய் நிருவாக ஆணையர், கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மைச் செயலாளர் கே. கோபால் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.