சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் குடந்தை எஸ்.ஆர்.ராதா காலமானார். உடல்நலப் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

அ.இ.அ.தி.மு.க மூத்த தலைவரும், எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் ஜவுளி மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சராக பதவி வகித்தவர் எஸ்.ஆர்.ராதா (வயது 86). இவர உடல்நலம் பாதிப்பு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான  ராதா,  தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா காலம் தொட்டு அரசியலில் மிகச்சிறந்த நேர்மையாளராக பணியாற்றி அனைத்து தரப்பு மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றவர். எம்ஜிஆரின், அன்புக்கு பாத்திரமானவராக திகழ்ந்த எஸ்.ஆர்.ராதா, அவரது ஆட்சியில் அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார்.

வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஒரு வாரமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

எஸ்.ஆர்.ராதா ஏற்கனவே தனது உடலை  தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கவேண்டும் என்று உடல் தானம் செய்துள்ளார். இதனால், அவரது உடல் தஞ்சைக்கு எடுத்துச்செல்லப்பட உள்ளது.

எஸ்.ஆர்.ராதா மறைவுக்கு அதிமுக உள்பட  பல்வேறுகட்சித்  தலைவர்கள்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.