சில வேளைகளில், சிறு பொறி பெருந்தீ ஆகிவிடும் என்பதற்கு, 1986ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நாம் ஓர் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். டில்லியிலிருந்து மதுரைக்கு வந்த அதிகாரிகள், மத்திய அரசு அலுவலகத்தில், தமிழக அதிகாரிகளின் மேசையில் இருந்த பெயர்ப் பலகைகளில் ‘இந்தி எழுத்துகள் ஏன் இல்லை’ என்று கேட்டு அந்தப் பலகையைத் தூக்கி எறிந்த போது, அது ஒரு மிகப் பெரிய போராட்டத்திற்கு வழிவகுக்கும் என்று அப்போது யாரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை.
1938, 1965ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களைப் போல, நீண்ட நாள்கள் நடந்த போராட்டமோ, அவற்றைப் போல பெரிய வீச்சினை ஏற்படுத்திய போராட்டமோ இது இல்லை என்றாலும், இரண்டு காரணங்களால் இன்று வரையில் பேசப்படுகின்ற போராட்டமாக உள்ளது. ஒன்று, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பத்துப் பேரின் பதவி பறிக்கப்பட்டது. இரண்டு, திமு கழகத் தலைவர் கலைஞரைச் சிறையில் அடைத்த போது அவருக்குக் கைதி உடை வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தின் ஒரு கரும்புள்ளி என்றே இதனைச் சொல்லலாம்.
1986 செப்டம்பர் மாதம், ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது ஒரு புதிய அரசாணை வெளியானது. மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்திலும் இந்தி பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், இந்தியில்தான் இனிமேல் டில்லியிலிருந்து கடிதங்கள் அனுப்பப்படும் என்றும் அந்த ஆணை கூறியது. அதுமட்டுமல்லாமல், மத்திய அரசின் மிகப்பெரிய ஆதரவிலும், நிதி ஒதுக்கீட்டிலும் தொடங்கப்பட இருக்கும் ‘நவோதயா’ பள்ளிக்கூடங்களில் இந்தி கட்டாயப் பாடமாக இருக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது. ஒரு பெரும் போராட்டத்தின் தொடக்கப்புள்ளியாக அவையே அமைந்தது.
இப்போராட்டத்தைப் பொறுத்த அளவு மத்தியில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ், அதன் கூட்டணியில் இருந்த தமிழக ஆளுங்கட்சி அதிமுக ஆகியனவற்றுக்கும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி திமுகவிற்கும் இடையிலான போராகவே அது அமைந்தது. எனினும் மொழிக்காக நடைபெற்ற – இந்தித் திணிப்பை எதிர்த்து நடைபெற்ற – ஒரு பெரும் போராட்டம் அது என்பதே உண்மை.
மத்திய அரசின் ஆணை வந்த சில நாள்களிலேயே, திமு கழகத்தின் செயற்குழு கூடியது. 27.09.1986 அன்று கூடிய திமுக செயற்குழு, நவம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் கோவையில் ‘இந்தி ஆதிக்க எதிர்ப்பு மாநாடு’ நடத்துவது என்று தீர்மானித்தது. அதன் தொடர்ச்சியாக நவம்பர் 17ஆம் நாள், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17ஆவது பகுதியில் உள்ள 343ஆவது பிரிவின் நகலை, பொது இடத்தில் எரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. நவம்பர் 17ஆம் தேதியைத் தேர்ந்தெடுத்ததற்கு இன்னொரு காரணமும் இருக்கலாம். 1965இல், மிகப்பெரிய இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றதை நாம் அறிவோம். அதற்கு முன்னோடியாக திகழ்ந்த ஒரு நிகழ்ச்சி, இதேபோன்ற சட்டஎரிப்புதான். அந்த நிகழ்வு அறிஞர் அண்ணா தலைமையில் 1963ஆம் ஆண்டு, நவம்பர் 17ஆம் தேதிதான் நடைபெற்றது. எனவே, அதே நவம்பர் 17 என்பதை திமுக, அதே இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குத் தேர்ந்தெடுத்திருக்கக் கூடும்.
இதற்கு இடையில்தான், செப்டம்பர் 30ஆம் தேதி மதுரை வந்த மத்திய அரசு அதிகாரிகள், இந்தி எழுத்து இல்லாத பெயர்ப்பலகையைத் தூக்கி எறிந்தனர். அதன் எதிர்வினையாக ஆங்காங்கு பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. மிகக் கூடுதலாகக் கோவை மாவட்டத்தில் இளைஞர்கள் பலர் கூடி, மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டங்களை நடத்தினர். அது கண்டு கோபப்பட்ட காங்கிரஸ் கட்சியினர், ஊர்வலமாக வந்து ஓர் இடத்தில் கலைஞர் உருவபொம்மையை எரித்தார்கள். அதற்குப் பதில் சொல்லும் வகையில், நூற்றுக்கணக்கான ராஜீவ்காந்தி உருவபொம்மைகள் திமுக இளைஞர்களால் எரிக்கப்பட்டன. அந்த ஊரில் இருந்த அஞ்சலகம் ஒன்றில் ஒரு வெடிகுண்டு வெடித்தது. அதன் தொடர்பாகத் திமுகவைச் சேர்ந்த பொள்ளாச்சி மா.உமாபதி, தம்புராஜ், கோவை கார்த்திக், உடையாம்பாளையம் நவமணி, காட்டூர் இராமமூர்த்தி, சிங்கை தங்கவேலு ஆகியோர் கைது செய்யப்பட்டு, காவல்நிலையத்தில் கடும் சித்ரவதைகளுக்கு உள்ளானார்கள்.
இந்தியைத் திணித்த காங்கிரஸ், இந்தியை எதிர்த்த திமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் இடையில், தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். தலைமையில் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுகவின் நிலை மிகுந்த சிக்கலுக்கு உள்ளாகியது. இந்தி எதிர்ப்பு என்பதே அவர்களுக்கும் கொள்கையாக இருந்தது என்றாலும், மத்தியில் ஆளும் காங்கிரசோடு அவர்களுக்கு நெருக்கமான கூட்டணித் தொடர்பும் இருந்தது என்பதால், இரண்டுக்கும் இடையில் அவர்கள் தள்ளாடினார்கள். திமுகவின் செயற்குழு முடிவு வெளிவந்த சில நாள்களிலேயே முதலமைச்சர் எம்.ஜி.ஆரும் இந்தியைத் திணிக்க வேண்டாம் என்று கேட்டு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார். திமுக கொடுத்த நிர்ப்பந்தம் காரணமாகவும், தமிழ்நாட்டில் தங்களின் நிலையை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்னும் எண்ணத்தின் அடிப்படையிலும்தான் அக்கடிதம் எழுதப்பட்டுள்ளது என்பது மக்களுக்குப் புரிந்தது.
அந்தச் சூழலில் தமிழகம் வந்திருந்த மேற்கு வங்க முதலமைச்சர் ஜோதி பாசுவைச் செய்தியாளர்கள் சந்தித்து தமிழ்நாட்டில் மீண்டும் எழத் தொடங்கியிருக்கும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றிக் கேட்டனர். அது ஒரு நியாயமான போராட்டமே என்றும், இந்தி எதிர்ப்பில் தமிழகம் எப்போதும் முன்வரிசையில்தான் நிற்கிறது என்றும் அவர் கூறினார். எம்.ஜி.ஆரின் நிலை பற்றிக் கேட்டபோது, மத்திய அரசுடன் நெருக்கமாக இருந்து கொண்டு, இந்தியையும் எதிர்ப்பதாகச் சொல்லுவது நம்பக்கூடியதாக இல்லை என்று அவர் கூறினார்.
நவம்பர் 8, 9 ஆகிய நாள்களில் கோவையில் திமுக சார்பில் நடைபெற்ற இந்தி ஆதிக்க எதிர்ப்பு மாநாடு ஒரு பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதிலும் இருந்து திமுகவினர் பெரும் திரளாய் அம்மாநாட்டில் கூடினர். காங்கிரசுக்கு மட்டுமின்றி, தமிழ்நாட்டில் மிகுந்த செல்வாக்கோடு விளங்கிய அதிமுகவிற்கும் அந்த மாநாடு ஓர் எச்சரிக்கை மணியாய் இருந்தது. மாநாட்டில் பேசிய தலைவர்களின் உரைகள் வந்திருந்த இளைஞர்களின் நரம்புகளை முறுக்கேற்றின. இறுதியாகப் பேசிய தலைவர் கலைஞர், இராமாயணத்தை மேற்கோள் காட்டி ஆற்றிய உரை இலக்கிய நயம் மிகுந்ததாகவும் அமைந்தது. வாலியை நேரில் நின்று கொல்ல முடியாத இராமன், சுக்ரீவனைப் பயன்படுத்திக் கொண்டான் என்பது இராமாயணம். மரத்தின் பின்னால் ஒளிந்திருந்து, இராமன் வாலியின் மீது அம்புவிட்டு கொன்றான் என்பது பழைய கதை. ”இனி எந்தக்காலத்திலும், எந்த இராமனும், எந்த சுக்ரீவன் உதவியோடும், வாலியை வீழ்த்திவிட முடியாது என்பது எழுதப்பட இருக்கும் வரலாறு” என்றார் கலைஞர்.
குறித்த நாளில், அதாவது நவம்பர் 17 அன்று, திமு கழகத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் தலைமையில், பொன்னுரங்கம், பாலன், பரிதிஇளம்வழுதி ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட நூற்றுக்கணக்கானவர்கள் சென்னையில் சட்டத்தின் 17ஆவது பகுதியின் ஒரு பிரிவைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள். அனைவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் நின்றிருந்தால், அந்தப் போராட்டம் அவ்வளவு வலிமையாக அடுத்தடுத்த நாள்களில் வளர்ந்திருக்காது. ஆனால், எம்.ஜி.ஆர். தலைமையிலான அமைச்சரவையின் ஆதரவோடு, அன்று அவைத் தலைவராக இருந்த பி.எச்.பாண்டியன் எடுத்த சில நடவடிக்கைகள், போராட்டத்தை மேலும் பெரிதாக்கின.
அதன்பின் கூடிய தமிழகச் சட்டமன்றத்தில், 17ஆவது பகுதியின் 343ஆவது பிரிவைத் திருத்தி அமைக்க வேண்டும் என்று ஆளுங்கட்சியே ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியது. ஆனால் அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சி உறுப்பினரான என்.எஸ்.வி.சித்தன் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தை, சபாநாயகர் பி.எச்.பாண்டியன் உடனே விவாதத்திற்கு எடுத்துக் கொண்டார். “இந்திய அரசமைப்புச் சட்டத்தை, மதிப்பதாக உறுதி மொழி ஏற்றுக் கொண்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர், அதனைப் பொதுவெளியில் எரித்திருக்கிறார்களே அவர்கள் மீது நடவடிக்கை உண்டா? அவர்கள் இம்மன்றத்தில் தொடர்ந்து உறுப்பினர்களாக நீடிக்க அனுமதிக்கப்படுவார்களா?” என்பதே சித்தன் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானம் ஆகும். அதனை உடனடியாக அவைத் தலைவர் கவனத்திற்கு எடுத்துக் கொண்டதே, அதற்கு ஆளுங்கட்சியின் ஆதரவு இருக்கிறது என்பதைக் காட்டிற்று.
அந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது சில நாள்களுக்குப் பின்னர் தீர்ப்பளித்த அவைத் தலைவர் பி.எச்.பாண்டியன், சட்டத்தின் நகலை எரித்த உறுப்பினர்கள் பதவி ஏற்கும் போது, தாங்கள் எடுத்துக் கொண்ட உறுதியை மீறிவிட்டார்கள் என்றும், இனிமேல் அவர்கள் இம்மன்றத்தின் உறுப்பினர்களாக நீடிக்க முடியாது என்றும், அரசமைப்புச் சட்டம் எஞ்சிய அதிகாரத்தின்(Residual powers) கீழ் தனக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின்படி தீர்ப்பு வழங்குவதாகக் கூறினார். அதனை எதிர்த்துச் சட்டமன்றத்தில் பெரும் அமளி எழுந்தது.
திமுகவின் சார்பில் சபாநாயகரின் தீர்ப்பைக் கண்டித்து, உரை நிகழ்த்த எழுந்த நாஞ்சில் மனோகரன், ரகுமான்கான் ஆகியோருக்குப் பேசுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. இருந்தும், நாஞ்சில் மனோகரன் தொடர்ந்து தன் கருத்தை அங்கு பதிவு செய்தார். எஞ்சியுள்ள அதிகாரத்தின் கீழ் என்று சபாநாயகர் ஒரு தொடரை இங்கு தந்திரமாகப் பயன்படுத்தினார். வெளிப்படையாக அவருக்கு அந்த மாதிரியான உரிமை எதனையும் சட்டம் வழங்கவில்லை என்பதாலேயே எஞ்சியுள்ள அதிகாரம் என்று அவர் கூறுகின்றார் என்பது மனோகரனின் வாதமாக இருந்தது. அவைக்கு வெளியே நடைபெற்ற செயலுக்கு, அவைத் தலைவர், அவையின் சட்டவிதிகளின்படி, தண்டனை வழங்க இயலாது என்பதை ரகுமான்கான் எடுத்துக்காட்டினார்.
1963ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா அவர்களும், இதே போலத்தான், சட்டநகலை எரித்தார். ஆனால் அப்போதிருந்த, இந்தியைத் திணிக்க விரும்பிய காங்கிரஸ் ஆட்சிகூட அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதன்பிறகும், டில்லி மாநிலங்களவை உறுப்பினராக அவர் தொடர்ந்தார். இந்நிலையில், இந்தியை எதிர்ப்பதாகச் சொல்லிக் கொள்ளும், இந்தித் திணிப்பை எதிர்த்துச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் அதிமுகவோ, திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிகளைப் பறிக்கிறது. இது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை என்று திமுகவினர் வாதிட்டனர்.
இந்த இடத்தில் இன்னொரு செய்தியையும் நினைவுபடுத்திக் கொள்ளலாம். அதே போராட்டத்தில் திருநெல்வேலியில் கலந்து கொண்டு, சட்டநகலை எரித்த அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் வை.கோபால்சாமியின்(வைகோ) பதவி பறிக்கப்படவில்லை. இந்தியைத் திணித்த காங்கிரஸ் கட்சியைவிட, ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசம் என்பதைப் போல, இங்குள்ள அதிமுக அரசு நடந்து கொண்டது.
மற்ற கட்சிகளைச் சேர்ந்த குமரி அனந்தன், அப்துல் சமது ஆகியோரும் அவைத் தலைவர் தன் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றுக் கேட்டுக் கொண்டனர். ஆனால், பி.எச்.பாண்டியனோ எதற்கும் உடன்படவில்லை. தான் அவசரத்தில் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும், இரண்டு-மூன்று நாள்கள் மிக நன்றாகச் சிந்தித்துப் பார்த்த பின்பே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறினார். எக்காரணம் கொண்டும், யாருக்காகவும் தன் முடிவை மாற்றிக் கொள்ள முடியாது என்றும் அவர் அறிவித்தார்.
இந்நிகழ்வுக்குப் பிறகு, போராட்டம் மேலும் வலிமை பெற்றது. தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் சட்டஎரிப்பு நடவடிக்கை பரவியது. நவம்பர் 19ஆம் தேதி, திமுகவின் மாவட்டச் செயலாளர் மு.கண்ணப்பன் தலைமையில் கோவை இராமநாதன், இரா.மோகன் உள்ளிட்ட 500 பேர் சட்ட நகலை எரித்துக் கைதானார்கள். அதற்கு அடுத்தநாள் தென்னார்க்காடு மாவட்டத்தில் நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இதேபோல தங்கபாண்டியன், மதுராந்தகம் ஆறுமுகம், தா.கிருட்டிணன், வீரபாண்டி ஆறுமுகம், அன்பில் தர்மலிங்கம், வை.கோபால்சாமி, பொற்செல்வி இளமுருகு, புதுக்கோட்டை பெரியண்ணன், கோ.சி.மணி, நாகூர் அனிஃபா முதலான தலைவர்கள் பலரும், பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் வெவ்வேறு மாவட்டங்களில் சட்டஎரிப்புப் போராட்டத்தை நடத்திச் சிறை சென்றனர்.
போராட்டத்தின் உச்சகட்டமாக, 1986 டிசம்பர் 9ஆம் தேதி, சென்னையில் கலைஞரே நேரடியாகப் போராட்டத்தில் கலந்து கொண்டார். அவருடன் ஆற்காடு வீராசாமி, மைனர் மோசஸ், எஸ்.பி.சற்குணம், ஆயிரம்விளக்கு உசேன் ஆகியோரும் சென்றனர். ஒரேநாளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அன்று கைதானார்கள்.
எம்.ஜி.ஆர். ஆட்சியில், கலைஞர் கைது செய்யப்பட்டார் என்னும் செய்தி பரவியதும், தமிழ்நாடே போராட்டக்களமாக மாறியது. மடமடவென்று ஆங்காங்கே சிலர் தீக்குளிக்கத் தொடங்கிவிட்டனர். பத்துப் பேருக்கும் மேலாக, அந்த நாளில் இளைஞர்கள் தீக்குளித்து மாண்டனர். எங்கு நோக்கினும் சாலை மறியல்கள், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் என்று தமிழ்நாடு முழுவதும் போராட்டமாகவே நிலை மாறிவிட்டது.
காங்கிரசுக்கும், திமுகவிற்கும் எழுந்த போராட்டம், அதிமுகவிற்கும், திமுகவிற்கும் இடையிலான போராட்டமாக உருப்பெற்றது. அதிமுகவும், சமரசத்திற்குத் தயாராக இல்லை. போராட்டத்தில் கலந்து கொண்ட மேலும் 6 சட்டமன்ற உறுப்பினர்களையும் பதவிநீக்கம் செய்தது. சபாநாயகரின் முடிவை எதிர்த்து, உறுப்பினர்கள் நீதிமன்றம் செல்லக்கூடும் என்பதால், தங்கள் பக்கத்தை மேலும் வலிமைப்படுத்திக் கொள்வதற்காக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. 10 உறுப்பினர்களையும் பதவிநீக்கம் செய்தது சரிதான் என்று அவைமுன்னவராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றினார். 1963ஆம் ஆண்டு, சட்டத்தை எரித்ததற்காகக் கைது செய்யப்பட்ட அண்ணாவை விடுதலை செய்யக்கோரி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரத்து முழங்கிய அதே நாவலர்தான், 1986இல் அரசின் நடவடிக்கையை ஆதரித்துத் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார் என்பது வரலாற்று முரண் என்றுதான் சொல்ல வேண்டும்.
கைது செய்யப்பட்ட அனைவருக்கும் பத்து வாரம் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. தீர்ப்பு வழங்கப்பட்டவுடன் நீதிமன்றத்திலிருந்து சிறைச்சாலைக்குத் திரும்பிய கலைஞருக்கும் மற்றவர்களுக்கும் கைதி உடைகள் வழங்கப்பட்டன. அதனை எதிர்த்து, ஆற்காடு வீராசாமி போன்றவர்கள் சிறை அதிகாரிகளிடம் முறையிட, கலைஞரோ, அவர்களைத் தடுத்தார். “என்னைக் கைதி உடையில் பார்க்க வேண்டும் என்று விரும்புகிற என் நண்பர் எம்.ஜி.ஆரின் ஆசையை ஏன் நீங்கள் தடுக்க விரும்புகிறீர்கள்?” என்று ஆற்காட்டாரைப் பார்த்துக் கேட்டார்.
கைதி உடையும், கடுங்காவல் சிறையும் கலைஞருக்கு வழங்கப்பட்டன என்பதை அறிந்து, தமிழ்நாடு முழுவதும் திமு கழகத் தொண்டர்கள் குமுறி எழுந்தனர். ஒருநாளில் முடிந்திருக்க வேண்டிய போராட்டம் பல மாதங்களுக்குத் தொடர்ந்தது. ஒவ்வொரு நாளும், போராட்டத்தின் அளவு கூடிக்கொண்டே போவதைப் பார்த்த, முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தண்டனை முடிவதற்கு, இரண்டு வாரங்கள் மட்டுமே இருந்த நிலையில், 1987 பிப்ரவரி மாதத் தொடக்கத்தில், கலைஞர் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்தார். நவோதயப் பள்ளி என்பதும், அந்தந்த மாநில விருப்பத்திற்கு உட்பட்டதே என்று மத்திய அரசும் அறிவித்தது. அதன் விளைவாக, 1986ஆம் ஆண்டு, இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்தது என்றே கூறலாம்.
(களங்கள் தொடரும்…)
– சுப.வீரபாண்டியன்
பயன்பட்ட நூல்கள்:
1. கருணாநிதி, மு. கலைஞர் – “நெஞ்சுக்கு நீதி – மூன்றாம் பாகம்” – திருமகள் நிலையம், சென்னை – 17.
2. ஆலடி அருணா – “இந்தி ஏகாதிபத்தியம்” – விகடன் பிரசுரம், சென்னை – 2.
3. திராவிட இயக்க நூற்றாண்டு சிறப்பு மலர் – திராவிட இயக்கத் தமிழர் பேரவை, சென்னை -24.
4. Ramasamy, A. Dr. – “Struggle for freedom of Languages in India” – Aazhi Publications, Chennai – 93.
5. Aladi Aruna – “Unfederal features of Indian Constitution” – Madhivanan Publications, Chennai – 20.
Disclaimer: எங்கள் செய்தி இணையதளத்தில் வரும் தொடர்கள் யாவும் பத்திரிகை டாட் காமிற்கே பிரத்தியேக, தனிப் பிரசுர உரிமை வழங்கப்பட்டுள்ளது . எனவே, பத்திரிகை டாட் காமின் முன் அனுமதியின்றி இதனை முழுவதுமாகவோ இல்லை இதில் வரும் சில பகுதிகளையோ உங்கள் பயன்பாட்டிற்கு உபயோகிக்க அனுமதியில்லை.