சென்னை: தமிழ்நாட்டின் தலைநகருக்கு நீர் தரக்கூடிய அனைத்து நீர் நிலைகளும் நிரம்பியுள்ளதால், அடுத்த கோடை காலத்தில், சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாது என்று கூறப்பட்டுள்ளது.
அந்த நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு, சரியானபடியாக மாநகராட்சி நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டதால், சமீபத்திய பெருமழையிலிருந்து தேவையான நீர் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மாதங்களில், கோயில் குளங்களில் மராமத்துப் பணிகளை மேற்கொண்ட அதிகாரிகள், அவற்றில் சுத்தமான முறையில் மழைநீரை பெறுவதற்கான பணிகளை மேற்கொண்டனர். மைலாப்பூரிலுள்ள சித்ரகுளம் மற்றும் வடபழனி முருகன் கோயில் குளம் போன்றவை இவற்றுள் அடக்கம்.
சாலைகளின் ஓரத்தில் நீர் வடிகட்டும் அமைப்பு பொருத்தப்பட்டு, அதன்மூலம் மழை நீர் வடிகட்டப்பட்டே, நீர் நிலைகளுக்கு வரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதாவது, மழைநீர் அடுக்குகளாக வடிகட்டப்படும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இத்தகைய முன்னேற்பாடுகளால், இந்த மழையின்போது, சென்னையின் நீர்பிடிப்புப் பகுதிகளில், தேவையான அளவு மழைநீர் சேகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.