டெல்லி: டெல்லி விவசாயிகளுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை டிசம்பர் 9ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 10வது நாளை எட்டி உள்ளது. 2 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
வரும் 8ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. அதற்கு முன்னதாக, போராட்டத்தை முடிவு கொண்டு வர மத்திய அரசு முயன்று வருகிறது.
இந் நிலையில் டெல்லியில் விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 30க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் டெல்லி விஞ்ஞான் பவனில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில் மத்திய அரசு சார்பில், மத்திய வேளாண்த் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய ரயில்வே மற்றும் வணிகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 4 மணி நேரம் கடந்து நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
இறுதியான முடிவை வழங்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று விவசாய சங்கங்களிடம் மத்திய அரசு கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, விவசாய சங்கங்களின் தலைவர்களுடன் வரும் 9ம் தேதி மீண்டும் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.