நாமக்கல்: தமிழகம் முழுவதும் வரும் 27ம் தேதி முதல் லாரிகள் வேலை நிறுத்தம் செய்ய போவதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்  அறிவித்து உள்ளது.

நாமக்கல்லில் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் அதன் தலைவர் குமாரசுவாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேகக் கட்டுப்பாட்டு கருவியை குறிப்பிட்ட நிறுவனத்தில் வாங்குமாறு தமிழக அரசு வற்புறுத்துகிறது.

ஆனால் உயர் நீதிமன்ற மதுரை கிளை, எந்த நிறுவனத்திலும் கட்டுப்பாட்டுக் கருவியை வாங்கிக்கொள்ளலாம் என்று கூறி உள்ளது. இதேபோல் வாகனங்களில் ஒட்டப்படும் ஒளிரும் ஸ்டிக்கரையும் குறிப்பிட்ட சில நிறுவனங்களிடம்தான் வாங்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர்.

சென்னை உயர்நீதிமன்றம் இதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஜிபிஆர்எஸ் கருவி ஏற்கனவே லாரிகளில் பொருத்தப்பட்டுள்ள நிலையில் குறிப்பிட்ட நிறுவனங்களிடம் அதை வாங்கி பொருத்துமாறு வலியுறுத்துகின்றனர்.

வேகக்கட்டுப்பாட்டுக் கருவி கட்டாயம் பொருத்துவது உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 27ம் தேதி காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்துள்ளோம் என்றார்.