டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் டெல்லி சலோ விவசாயிகள் போராட்டம் இன்று 10வது நாளாக தொடர்கிறது. இந்த நிலையில், இன்று விவசாய அமைப்பினருடன் மத்திய அரசு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

மத்தியஅரசு கொண்டுவந்துள்ள  வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ், திமுக உள்பட அரசியல் கட்சிகளும் விவசாய சட்டங்களுக்கு கடும எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில்,  3 புதிய வேளாண் சட்டங்களையும்  திரும்பப் பெற வேண்டும என வலியுறுத்தி, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  போராட்டம் இன்று 10வது நாளாக தொடர்கிறது. இந்த போராட்டத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் குவிந்து வருகின்றனர்.

இதன் காரணமாக, விவசாய பிரதிநிதிகளுடன் மத்தியஅரசு பேச்சுவார்ததை நடத்தி வருகிறது. ஏற்கனவே 4 கட்டமாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதில் சுமூக உடன்பாடு எட்டப்படாத நிலையில், இன்று அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இதுகுறித்து  செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய கிசான் அமைப்பின் பொதுச் செயலாளர் லகோவல், வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று மத்திய அரசிடம் திட்டவட்டமாக தெரிவித்து இருப்பதாகவும்,  வரும் 8ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இன்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாவிட்டால், பாராளுமன்றத்தை முற்றுகையிட விவசாயிகள் தீர்மானித்து உள்ளனர்.

இதனிடையே டெல்லி எல்லையில் குவிந்துள்ள விவசாயிகளால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாகவும், ஆகவே அவர்களை உடனே அப்புறப்படுத்துமாறு உத்தரவிடக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.