டெல்லி: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 6 மாத காலம் அவகாசம் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு உச்சநீதிமன்றம் எச்சரித்த பிறகு கடந்த ஆண்டு (2019) இறுதியில் தேர்தல் நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கிடையில், தமிழகத்தில் பல புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால், வார்டுகள் பிரிப்பதில் குளறுபடி ஏற்பட்டது. இதையடுதது, புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து, 27 மாவட்டங்களில் உள்ள ஊரகப்பகுதிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலே நடத்தப்பட்டது. அதன்படி முதல்கட்ட தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் 27ந்தேதியும், 2வது கட்ட தேர்தல் டிசம்பர் மாதம் 30-ம் தேதியும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதுவரையில் 27 மாவட்டங்களுக்கு, கிராமப்புற ஊரக தேர்தல் மட்டும் நடத்தி முடிக்கப்பட்டுஉள்ளது. மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு தேர்தலை நடத்தாமல் தமிழகஅரசு காலம் தாழ்த்தி வருகிறது.
தேர்தலை உடனே நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில், கொரோனா தொற்று பரவலும் சேர்ந்ததால், தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழக உள்ளாட்சி தேர்தலை முழுவதுமாக நடத்தி முடிக்க, மேலும் ஆறு மாத கால அவகாசத்தை நீட்டிக்கும்படி, கோரப்பட்டது.இம்மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒன்பது மாவட்டங்கள் உட்பட, அனைத்து பகுதிகளிலும் வார்டு மறுவரை பணி இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. எனவே, அப்பணிகளை முடிக்க, மேலும், ஆறு மாதங்கள் அவகாசம் அளிக்குமாறு, மாநில தேர்தல் கமிஷன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வார்டு மறுவரையறை பணிகளை முடிக்க, மாநில தேர்தல் கமிஷனுக்கு மேலும், ஆறு மாதங்கள் அவகாசத்தை நீட்டித்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.