தூத்துக்குடி
இன்று மாலை 6 மணிக்கு மேல் தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.
புரெவி புயல் தமிழகத்தை மிகவும் அச்சுறுத்தி உள்ளது. பாம்பன் பகுதியில் இந்த புயல் கடற்கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மாலையில் பலத்த காற்று மட்டும் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை மற்றும் காற்று ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மிகவும் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.
இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செல்வராஜ், “இன்று மாலை தூத்துக்குடியில் பலத்த காற்றோடு கூடிய கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆகவே தூத்துக்குடி மாவட்டத்தில் மாலை 6 மணிக்கு மேல் பொதுமக்கள் வெளியே வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புயலால் பாதிப்பு அடைந்தோருக்கு உடனுக்குடன் நிவாரண பணிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 9486454714 என்னும் எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல்கள் அளிக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.