சேலம்: நாடு முழுவதுமுள்ள காவல் நிலையங்களில், இரண்டாவது சிறந்த காவல் நிலையத்திற்கான விருதை சேலம், சூரமங்கலம் மகளிர் காவல் நிலையம் பெற்றுள்ளது. தேசிய அளவில் விருதை பெற்றுள்ள சேலம் மகளிர் காவல்நிலையத்துக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

மத்திய உள்துறை அமைச்சகத்தால் ஆண்டுதோறும், சிறந்த காவல்நிலையங்கள் குறித்துஆய்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு வருகிறது.  அதன்படி,  2020ஆம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில், சேலத்தில் உள்ள சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் தேசிய அளவிலான 2வது சிறந்த காவல் நிலையமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மத்திய உள்துறையின் அறிவிப்பின்படி,   நாடு முழுவதுமுள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் மத்தியஅரசால் அமைக்கப்பட்ட குழுக்கள் நேரில் சென்று ஆய்வு செய்தன. இந்தக் குழுவினர், காவல் நிலையங்களுக்குச் சென்று,  அவற்றைப் பராமரிக்கும் விதம், புகார் மனு அளிக்க வரும் பொதுமக்களை காவலர்கள் அணுகுமுறை, வழக்கு விசாரணைகளில் தண்டனை பெற்றுத்தரும் விபரம், நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்த விவரம் ஆகியவை குறித்து முழுமையாக விசாரித்து, சிறந்தக் காவல் நிலையங்கள் பட்டியல்களைத் தயாரித்தன.

இதைத்தொடர்ந்து, ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதில்,  தேசிய அளவில் சிறந்த காவல் நிலையமாக மணிப்பூர் மாநிலக் காவல் நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, 2வது இடத்தை  சேலம் மாநகராட்சிப்பகுதியில் உள்ள சூரமங்கலம் மகளிர் காவல் நிலையம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் சேலம் மாநகரக் காவல் ஆணையாளருக்கு அளித்துள்ள தகவலில், ”சேலம், சூரமங்கலம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வளர்மதி, காவல் உதவி ஆய்வாளர்கள் உமாராணி, ரெஜினா பிவீ மற்றும் 17 பெண் காவலர்கள் சிறப்பாகப் பணியாற்றி 10க்கும் மேற்பட்ட வழக்குகளில் தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளனர். இவைதவிர சிறுமிகளின் பாலியல் வழக்குகளை உடனுக்குடன் விசாரித்து ஆறுக்கும் மேற்பட்டோரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.

சேலம், சூரமங்கலம் மகளிர் காவல் நிலையம், வழக்கு விசாரணை, பதிவேடுகளைப் பராமரிப்பதிலும் சிறப்பாக இருந்ததால் தேசிய அளவில் இரண்டாவது இடத்திற்குத் தேர்வு செய்யப்பட்டு விருதும் பெற்றுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, சேலம் மாநகரக் காவல் ஆணையர் செந்தில்குமார், சூரமங்கலம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வளர்மதி, அனைத்துப் பெண் காவலர்களைப் பாராட்டி மேலும் திறம்பட பணியாற்ற வேண்டுமென கேட்டுக் கொண்டு அவர்களுக்கு வாழ்த்து கூறினார்.