லக்னோ :
டெல்லி அருகே உத்தரபிரதேச மாநில பா.ஜ.க. அரசு பிரமாண்டமாக “பிலிம் சிட்டி” அமைக்க உள்ளது.
இந்த நிலையில் மும்பைக்கு இரண்டு நாள் பயணமாக சென்ற உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத், இந்தி சினிமா உலக வி.ஐ.பி.க்களை சந்தித்து பேசினார்.
டெல்லி அருகே உ.பி. அரசு அமைக்கும் திரைப்பட நகரில் ஷுட்டிங் நடத்த வருமாறு அவர் அழைப்பு விடுத்ததாக தெரிகிறது. இதனை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கிண்டல் அடித்துள்ளார்.
“பன்முகத்தன்மை கொண்ட விசாலமான மனப்பான்மை உள்ளவர்களைத் தான் சினிமா உலகம் எதிர்பார்க்கிறது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அகிலேஷ் யாதவ், “குறுகிய மனப்பாங்கு உள்ளவர்களால் சினிமாவை முன்னேற்ற முடியாது” என தெரிவித்துள்ளார்.
“ஷுட்டிங் நடத்த இன்று அழைப்பு விடுக்கும் ஆட்சியாளர்கள், நாளைக்கு படத்தின் கதை என்ன ? உடைகள் என்ன ? என்ன மொழிப்படம் ? என்னென்ன காட்சிகள் உள்ளன ? என்பதை எல்லாம் கேட்பார்கள்” என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
“இந்தி சினிமா உலகத்தை இங்கு கொண்டு வரும் முயற்சியை ஒதுக்கி வைத்து விட்டு, உ.பி.மாநில விவகாரத்தில் கவனம் செலுத்துங்கள்” என யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் யாதவ் அறிவுரை கூறியுள்ளார்.
– பா. பாரதி