பெங்களூரு: சிறை தண்டனை காலம் 2021ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதியுடன் முடியும் நிலையில் முன்கூட்டியே விடுதலை செய்ய சசிகலா விண்ணப்பித்து உள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா மாநிலம் பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா,  தண்டனையை அனுபவித்து வருகிறார். சிறை விதிகளின் அடிப்படையில் கைதிகள் நன்னடத்தையின்படி, அனைவருக்கும் மாதம் தோறும் 3 நாட்கள் தண்டனை குறைப்பு சலுகை பெற முடியும்.

அதன் அடிப்படையில், சசிகலா 43 மாத காலம் சிறைவாசம் முடித்துள்ளார். 43 மாதங்களுக்கு தலா 3 நாட்கள் என்று கணக்கிட்டால் அவரது தண்டனை காலத்தில் 129 நாட்கள் தண்டனை குறைக்கப்படும். குற்றவாளிகள் நன்னடத்தையின்படி, மாதத்திற்கு 3 நாட்கள் நிவாரணம் பெற தகுதியுடையவர்கள்.

ஆனால் நிவாரணம் ஒரு உரிமை அல்ல, ஆனால் சிறை அதிகாரிகளின் விருப்பமாகும். தண்டனை காலம் 2021ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதியுடன் முடிகிறது. இந் நிலையில் முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு சசிகலா  பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை அதிகாரிகளிடம் விண்ணப்பித்து உள்ளார். அதில் முந்தைய தீர்வை மறுபரிசீலனை செய்ய அவர் கோரியுள்ளார்.

இது குறித்து சிறைத்துறையின் மூத்த அதிகாரி கூறியதாவது: பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை அதிகாரிகள் இப்போது அவரது விண்ணப்பத்தை சிறைத் துறைக்கு அனுப்பி இருக்கின்றனர். அவர்கள் இந்த விவகாரத்தில் இன்னும் எந்த அழைப்பும் விடுக்கவில்லை. விண்ணப்பத்தின் மீது எடுக்கப்படும் முடிவு நிலுவையில் உள்ளது என்று தெரிவித்தார்.