டெல்லி: தபால் வாக்குகளால்  15 சதவீதம் முறைகேடு நடக்கும் என்று தலைமை தேர்தல் ஆணையத்துக்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், பொருளாளருமான எம்பி டி.ஆர்.பாலு அவசரக் கடிதம் எழுதியுள்ளார்.

திமுக கழகப் பொருளாளரும், தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவரும், திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு , இன்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ஒரு அவசர கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் உள்ள விவரம் வருமாறு:

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு, இந்திய தேர்தல் ஆணையத்திலிருந்து கடந்த அக்டோபர் மூன்றாம் தேதியன்று அனுப்பப்பட்ட சுற்றறிக்கை எண்.52/2020/SDRIVol.1ன்படி, பீகார் மாதிரி தேர்தல்களை அனைவராலும் பின்பற்றப்பட வேண்டுமென்ற கருத்துகள் மிகவும் அதிர்ச்சியூட்டுகின்றன.

இந்தக் கடிதத்தை திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலுக்கிணங்க எழுதியுள்ளதாகவும், இந்த சுற்றறிக்கை வாக்குச் சாவடிகளில் தற்போது பின்பற்றப்படும் ஒளிவு மறைவற்ற வாக்களிக்கும் முறையினை சீர்குலைக்க வழிவகை செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

தேர்தல் நடத்தை (திருத்தம்) விதிகள் 2019 பிரிவு 3(A) (aa)ன்படி, ”மாற்றுத்திறனாளிகள்”, வாக்களிக்க வராத வாக்காளர்களாக கருதப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், யார் யாரெல்லாம் மாற்றுத்திறனாளிகள் என்ற விளக்கம் அளிக்கப்படவில்லை. 22 அக்டோபர் 2019 தேதியிட்ட, தேர்தல் நடத்தை (திருத்தம்) விதிகள் 2019 பிரிவு 3(C) (e)ன்படி, 80 வயதிற்கு மேற்பட்டோர் ”முதியோர்கள்” என இருந்ததை மாற்றி, 19 ஜூன் 2020 தேதியிட்ட, தேர்தல் நடத்தை (திருத்தம்) விதிகள் 2020 பிரிவு 2(ii)ன்படி, 65 வயதிற்கு மேற்பட்டோர் ”முதியோர்கள்” என ஏழு மாதத்திற்குள்ளாகவே மாற்ற வேண்டிய அவசியமென்ன என்பது தெளிவாக்கப்படவில்லை.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு 13 ஜூலை 2020 அன்று எழுதிய கடிதத்தில், மேற்கண்ட இரண்டு தேர்தல் நடத்தை விதிகளையும் உடனடியாக நீக்க வேண்டுமெனவும், அனைத்து அரசியல் கட்சிகளையும், நாட்டிலுள்ள சம்மந்தப்பட்ட பயனாளிகளையும் கலந்து ஆலோசித்து, ஒளிவு மறைவற்ற தேர்தல் முறையை உறுதிப்படுத்த ஆவன செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.

அனைத்து அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகளுக்கிணங்க, இந்திய தேர்தல் ஆணையத்தின் 16 ஜூலை 2020 தேதியிட்ட, பத்திரிகை செய்தியின்படி 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு தபால் வாக்குச் சீட்டுகளுக்கான வசதிகள் தரப்படாது என உறுதி அளிக்கப்பட்டது. மேலும், 80 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், கொரோனா நோய் தொற்று உள்ளவர்களுக்கும் தபால் வாக்குச் சீட்டு வசதிகள் அளிக்கப்பட்டது.

ஆனால், தற்போது 3 அக்டோபர் 2020 தேதியிட்ட, இந்திய தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கையின்படி, பீகார் மாதிரி தேர்தல் முறைகள் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளாலும் பின்பற்றப்பட வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

இத்தேர்தல் முறையின்படி வாக்குச்சாவடி அதிகாரிகள், சம்மந்தப்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குச் சீட்டுகளை அளித்து, அவர்களது வாக்குகளைப் பெற்று, பின்னர் உரிய அதிகாரிகளிடம் அளிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது, நியாயமான மற்றும் ஒளிவு மறைவற்ற தேர்தல் முறைக்கு முற்றிலும் எதிரானதோடு, போலி வாக்காளர்களை அதிகப்படுத்தியும், அதிகாரிளை தவறாக பயன்படுத்தவும் மற்றும் அரசியல் கட்சிகளிடையே சமமற்ற நிலையையும் உருவாக்கும்,

‘மாற்றுத்திறனாளிகள்”, என்ற வார்த்தை தேர்தல் நடத்தை விதிகளில் துல்லியமாக வரையறுக்கப்படாத நிலையில், தபால் வாக்குச் சீட்டுகள் அளிக்கும், தேர்தல் பொறுப்பு அதிகாரி தனது அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

”முதியோர்கள்’ என்பவர்களுடைய வயதினை கணக்கிட எந்த துல்லியமான வரையறையும் தேர்தல் விதிகளில் குறிப்பிடப்படாத நிலையில், தபால் வாக்குச் சீட்டுகள் அளிக்கும், தேர்தல் பொறுப்பு அதிகாரி தனது அதிகாரத்தை, நியாயமான மற்றும் ஒளிவு மறைவற்ற தேர்தல் முறைக்கு முற்றிலும் எதிராக பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

ஓட்டளிக்க வராத வாக்காளர்களுக்கு, தபால் வாக்குச் சீட்டுகள் அளிக்கப்பட்டால், அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி முகவர்கள் இல்லாத நிலையில், போலி வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகளவில் பெருக வாய்ப்பு உள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் 3 அக்டோபர் 2020 தேதியிட்ட சுற்றறிக்கையை வெளியிடும் முன், அனைத்து அரசியல் கட்சிகள், சம்மந்தப்பட்ட பயனாளிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள் ஆகியோர்களுடன் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக வெளியிடப்பட்டது, தேர்தல் ஆணைத்தின் நோக்கத்தை சந்தேகத்திற்குள்ளாக்கிறது.

மேலும், இந்த சுற்றறிக்கை அனைத்து பயனாளிகளுக்கும் சம வாய்ப்பு அளிக்க மறுப்பதோடு, நியாயமான மற்றும் ஒளிவு மறைவற்ற தேர்தல் முறைக்கு முற்றிலும் எதிராக அரசு எந்திரத்தை பயன்படுத்தும் வழிமுறைகளை அதிகரித்துள்ளது.

எனவே, இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட, 22 அக்டோபர் 2019 மற்றும் 19 ஜூன் 2020 தேதியிட்ட தேர்தல் நடத்தை விதிமுறைகளையும், 3 அக்டோபர் 2020 தேதியிட்ட சுற்றறிக்கைகளையும் உடனடியாக நீக்கக்கோரியும், நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடனும், சம்மந்தப்பட்ட பயனாளிகளுடனும் கலந்தாலோசித்து சிறந்த தீர்வைக் காணவும், நியாயமான மற்றும் ஒளிவு மறைவற்ற தேர்தல் முறையை உறுதிப்படுத்தவும் மற்றும் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.