ஐதராபாத் :
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத் மாநகராட்சிக்கு நாளை தேர்தல் நடக்கிறது. ஆளும் டி.ஆர்.எஸ். கட்சியின் வசமுள்ள இந்த மாநகராட்சியை கைப்பற்ற பா.ஜ.க. கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
வெள்ளிக்கிழமை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, சனிக்கிழமை உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத், ஞாயிற்றுக்கிழமை உள்துறை அமைச்சர் அமீத்ஷா என அந்த கட்சியின் வி.ஐ.பி.க்கள் ஐதராபாத்தை ரணகளப்படுத்தி விட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் ஐதராபாத்தில் நேற்று பிரச்சாரம் செய்த ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவரும், எம்.பி.யுமான அசாசுதீன் ஒவைசி “இந்த தேர்தல் மாநகராட்சிக்கு நடைபெறும் தேர்தல் போல் தெரியவில்லை. மோடிக்கு பதிலாக புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கு நடக்கும் தேர்தல் போல் தோன்றுகிறது. பா.ஜ.க.வுக்கு ஆதரவாக எல்லோரும் பிரச்சாரம் செய்து விட்டனர்” என குறிப்பிட்டார்.
“கர்வானில் நான் பிரச்சாரம் செய்தபோது, ‘ட்ரம்ப் மட்டும் தான் பா.ஜ.க. பிரச்சாரத்துக்கு வரவில்லை’ என குழந்தை ஒன்று கூறியது. அது உண்மைதான். ட்ரம்பை தவிர எல்லோரும் ஐதராபாத் வந்து பிரச்சாரம் செய்து விட்டார்கள்” என கிண்டல் செய்தார், ஒவைசி.
அமீத்ஷா வருவதற்கு முன்பாக ஓட்டு சேகரித்த தெலுங்கானா முதல்-அமைச்சர் கே.சந்திரசேகரராவ் “ஐதராபாத் நகரில் அமைதியை குலைக்க பிளவு சக்திகள், இங்கே வந்து கொண்டிருக்கின்றன” என மறைமுகமாக உள்துறை அமைச்சரை குற்றம் சாட்டினார்.
– பா. பாரதி