சென்னை: சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால், சென்னை மாநகருக்கு குடிநீர் வினியோகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது நாள் ஒன்றுக்கு 830 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை மாநர மக்களின் குடிநீர் தேவையை பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் இதுவரை பூர்த்தி செய்து வந்தன. தற்போது, இருந்து பெறப்படும் தண்ணீர் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த ஏரிகளுக்கான நீர் வரத்து கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மற்றும் மழை நீர் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் வருகிறது. தற்போது திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகை ஏரியும் இணைந்துள்ளது. மேலும் கிருஷ்ணா நீர், வீராணம் காவேரி நீர் போன்றவையும் சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றி வருகிறது.
இந்த ஆண்டு கடந்த சில மாதங்களாக பெய்து வரும் மழை மற்றும், தற்போதைய வடகிழக்கு பருவமழை, மற்றும் நிவர் புயல் காரணமாக பெய்த மழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில், ஏரிகளில் 10 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.
இதனால், சென்னை மாநகர மக்களுக்கு 2021ம் ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு வராது என்று கூறும் குடிநீர் வாரிய அதிகாரிகள், சென்னைக்கு வழங்கப்படும் குடிநீர் 750 மில்லியன் லிட்டரில் இருந்து 830 மில்லியன் லிட்டராக உயர்த்தி வினியோகம் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்து உள்ளனர். இனிவரும் நாட்களிலும், போதுமான மழை இருந்தால் இதே அளவு அடுத்த ஆண்டும் வினியோகம் செய்ய முடியும். தற்போது இருக்கும் தண்ணீர் மூலம் அடுத்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை வரை தாக்குப்பிடிக்க முடியும் என்ற நிலை உருவாகி இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.
மகிழ்ச்சி: சென்னையில் அடுத்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு வராது என அதிகாரிகள் தகவல்…