நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடப்போவதாக கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31ந்தேதி அறிவித்தார். அப்போது, தனது ரசிகர்கள் மன்றத்தினரை சந்திப்பை நடத்திய ரஜினிகாந்த், ‘தான் அரசியலுக்கு வருவது உறுதி’ என்று அறிவித்தார். ஆனால், ஆண்டுகள் 3 கடந்தோடிய நிலையில், அவ்வப்போது ரசிகர் மன்றத்தினரை கூட்டி, தான் நடித்து வரும் படங்களை வெற்றிப்படங்களாக மாற்றி வருகிறார்.
இந்த நிலையில், இன்னும் 6 மாதத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. ஆனால், ரஜினி இன்னும் கட்சி குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடாத நிலையில், கடந்த அக்டோபர் 29-ந் தேதி அவரது பெயரில் பரபரப்பு அறிவிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. அதில், ‘தமிழகத்தில் ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றத்திற்காக மக்களிடையே எழுச்சியை உண்டாக்க இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் மற்றும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, அக்டோபர் 2-ந் தேதி மதுரையில் மாநாடு கூட்டி கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்கலாம் என்றிருந்தேன். ஆனால், கொரோனா பிரச்சினையினால் கடந்த பல மாதங்களாகவே யாரையும் சந்திக்க முடியவில்லை. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தவும் இயலவில்லை. 2011-ம் ஆண்டு எனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்து வந்தேன். அமெரிக்காவில் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ கிளீனிக்கில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. அரசியலில் ஈடுபடலாமா என்று டாக்டர்களிடம் கேட்டபோது, கொரோனா காலத்தில் நீங்கள் மக்களைச் சந்தித்து, அவர்களைத் தொடர்பு கொண்டு அரசியலில் ஈடுபடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் அறிவுரை கூறியுள்ளனர். அதனால், சூழ்நிலையை கருத்தில் கொண்டு மக்களும், ரசிகர்களும் என்ன முடிவு எடுக்க சொல்கிறார்களோ அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த கடிதம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்த், ‘அந்த அறிக்கையில் உள்ள, என் உடல் நிலை பற்றிய கருத்துக்கள் அனைத்தும் உண்மை, தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன்’ என்று நேரில் விளக்கம் அளித்தார். இதனால், ரஜினி அரசியலுக்கு முழுக்கு போடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்த நிலையில்தான் கடந்த வாரம் தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, ரஜினியை சந்திக்க முயற்சி செய்த நிலையில், ரஜினி அவரை சந்திக்க மறுத்துவிட்டதாக கூறப்பட்டது. இதற்கு அவரது உடல்நிலையை காரணமாக கூறப்பட்டதாகவும் தகவல் வெளியானது. ரஜினியை பாஜகவுக்கு இழுக்க பாஜக தலைமை முயற்சித்து வரும நிலையில், திடீர் திருப்பமாக ரஜினியின் தற்போதைய திடீர் அழைப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதையடுதது, இன்று காலை 10 மணிக்கு கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரஜினி மக்கள் மன்ற 38 மாவட்ட செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் காலை 9 மணிக்கே மண்டபத்திற்கு வந்து விட வேண்டும் என்றும், அனைவரும் தவறாமல் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில், ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவாரா அல்லது அரசியலுக்கு முழுக்குப் போடுவாரா? அல்லது பாஜகவுக்கு ஆதரவான நிலை எடுப்பாரா? என்பத குறித்து ஆலோசனை மேற்கொள்வார் என தெரிகிறது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நடத்தும் ஆலோசனைக்கேற்ப அவர் முடிவு எடுத்து அறிவிப்பார் என்று தெரிகிறது.
ஏற்கனவே பல முறை தனது மக்கள்மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ள ரஜினி, இதுவரை எந்தவொரு தைரியமான, தெளிவான முடிவு எடுக்காத நிலையில், இன்றைய கூட்டத்தைத் தொடர்ந்தும், அவரது அறிவிப்பு எப்போதும்போல வளவள கொழ கொழ-வென என்றுதான் இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.