மாஸ்கோ:
ரஷ்ய தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க ஹெட்ரோ நிறுவனம் ஒப்புக்கொண்டது.
இந்திய மருத்துவ நிறுவனமான ஹெட்ரோ, இந்தியாவில் ரஷ்ய நாட்டின் தடுப்பூசியான ஸ்புட்னிக் வியை ஆண்டுக்கு 100 மில்லியனுக்கும் அதிகமாக உற்பத்தி செய்ய ஒப்புக் கொண்டுள்ளதாக, ஸ்புட்னிக் வி தன்னுடைய அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளது.
ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம்(ஆர் டி ஐ எஃப்) மற்றும் ஹெட்ரோ ஆகியவை 2021-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஸ்புட்னிக் வி உற்பத்தியை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளன.
கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி கொரோனா தடுப்பூசியை பதிவு செய்ததன் மூலம் உலகத்திலேயே முதல் தடுப்பூசியை பதிவு செய்த முதல் நாடு என்ற பெயரை ரஷ்யா பெற்றது.
ரஷ்யாவுடைய முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக் என்ற பெயரில் உலகத்தின் முதல் தடுப்பூசியை ரஷ்யா வெளியிட்டது, இந்த தடுப்பூசி ரஷ்யாவின் கமலேயா தேசிய ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்டது.
இதைப்பற்றி ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிரில் டிமிட்ரிவ் தெரிவித்துள்ளதாவது: இந்திய மண்ணில் பாதுகாப்பான கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி உற்பத்திக்கு வழிவகுக்கும் ஆர் டி ஐ எஃப் மற்றும் ஹெட்ரோ இடையேயான ஒப்பந்தத்தை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்… உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டிலும் ஸ்புட்னிக் வி தயாரிக்கப்படும் என்று நான் நம்புகிறேன். கொரோனா தொற்றுநோயின் இந்த சவாலான காலகட்டத்தில் எங்களுக்கு ஒத்துழைப்பு தந்த இந்தியாவின் ஹெட்ரோ நிறுவனத்திற்கு நன்றி என்று கிரில் டிமிட்ரிவ் தெரிவித்துள்ளார்.