சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக டிசம்பர் 1ஆம் தேதி முதல் மீண்டும் பரவலாக மழை பெய்ய தொடங்கும் மீனவர்கள் கடலுக்குள் செல்வதை தவிர்க்கும்படியும் வானிலை மையம் அறிவித்து உள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியை மிரட்டி வந்த நிவர் புயலின் சுவடுகூட மறையான நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளை உருவாகக் கூடும் , அது வரும் 30ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழகக் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டிசம்பர் 1 முதல் 3ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறும் தெரிவித்து உள்ளது.
இதையடுத்து,தமிழகத்தை நோக்கி மற்றொரு புயல் வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் கடல் சீற்றமாக காணப்படுவதால், மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்லக்கூடாது. மீறினால், அபராதம் விதிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மீனவளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நிவர் புயல் கரையை கடந்த நிலையில், தற்போது வலுவிழந்து குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக தெற்கு ஆந்திரா மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட வடமேற்கு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் 23 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.