சென்னை: தமிழகத்தில்  புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு கட்டப்பட உள்ள கலெக்டர் அலுவலகம் கோவிலுக்கு சொந்த இடத்தில் கட்ட தமிழகஅரசு அனுமதி வழங்கிய நிலையில்,  கலெக்டர் அலுவலகம் கட்ட சென்னை உயர்நீதி மன்றம் அதிரடியாக இடைக்காலத் தடை விதித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக கடந்த ஆண்டு (2019) நவம்பர் 26ந்தேதி உருவாக்கப்பட்டது.  இந்த மாவட்டத்தின் கீழ், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, கல்வராயன் மலை ஆகிய 6 தாலுக்காக்கள் இணைக்கப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து,  அதைத்தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு, மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைக்க, வீரசோழபுரம் சிவன் கோயிலுக்கு சொந்தமான 35 ஏக்கர் நிலத்தை ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.

இதை எதிர்த்து திருச்சியை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கு  நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது,  மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ”கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் அமைக்க கோயில் நிலத்தை அரசுக்கு வழங்குவது தொடர்பாக அக்.,29 ல் ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தினார். ஆனால், அக்கூட்டம் நடப்பதற்கு 6 நாட்களுக்கு முன்பே முதல்வர், கலெக்டர் அலுவலகம் அமைக்க அடிக்கல் நாட்டி பணிகள் துவங்கிவிட்டன. 100 கோடி ரூபாய் மதிப்பு நிலத்தை அரசுக்கு ரூ.1 கோடியே 98 லட்சம் ரூபாய்க்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.  எனவே, மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைக்கும் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும்” என  கூறினார். இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையும் பதில் மனுத்தாக்கல் செய்தது.

இதையடுத்து,  மனு தொடர்பாக டிச.ம்பர் 9 ம் தேதிக்குள் தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை பதில் தெரிவிக்க உத்தரவிட்டு, அதுவரை கலெக்டர் அலுவலகம் அமைக்கும் பணிகளை நிறுத்தி வைக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.