செங்கல்பட்டு: மதுராந்தகம் ஏரி நிரம்பி வருவதால், அதிலிருந்து உபரி நீர் திறக்கப்பட இருப்பதாகவும், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை, நிவர் புயல் காரணமாக கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புயல் காரணமாக 3 நாட்கள் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக, பல நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. பல ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியிருப்பதால், ஏரியின் பாதுகாப்பு கருதி, உபரி நீர் திறக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமாக மொத்தம் 528 ஏரிகள் உள்ளன. இதில் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி உள்பட 235 ஏரிகள் நிரம்பியுள்ளது. தொடர்ந்து ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் ஏரிகள் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர்.
மாவட்டத்தின் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரியின் மொத்த கொள்ளளவு 23.3 அடி. தற்போது, தற்போது நீர்மட்டம் 20 அடியை தாண்டி உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால் ஏரி விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, மானாம்மதி, கொண்டங்கி, தையூர், கொளவாய், நந்திவரம்-கூடுவாஞ்சேரி, பொன்விளைந்தகளத்தூர், மண்ணிவாக்கம், கீழ்கட்டளை, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட 235 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மற்ற ஏரிகளில் 80 சதவீதம் நிரம்பியுள்ளது. ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் எந்நேரமும், அதன் கரைகள் உடைந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.
இதன் காரணமாக ஏரிகளை திறந்துவிடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மதுராந்தகம் ஏரியும் இன்று இரவு திறந்துவிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதையொட்டி, கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், குறிப்பாக ஆற்றின் கரையோரம் உள்ள கத்திலிச்சேரி, விழுதமங்கலம், வளர்பிறை, முள்ளி, முன்னுத்திக்குப்பம், நீலமங்கலம் உள்ளிட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.