புதுச்சேரி: நிவர்புயலால் கடுமையாக பாதிக்கப்படுடுள்ள புதுச்சேரி மாநிலம் உப்பளம் பகுதியில் புயலின்போது மரத்தில் இருந்து முறிந்த மரக்கிளையானது, அருகே இருந்த மின்சார வயர்களில் சிக்கியது. இதனால், மின் விநியோகம் துண்டிக்கப்பட்ட நிலையில், அதை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து, மின் நிவாரண பணிகளை மேற்கொண்ட மின்வாரிய ஊழியர்களில் ஒருவர், அருகே இருந்த மின்கம்பத்தின் வழியாக மேலே ஏறி, மின்சார வயர்மீது நடந்துசென்று, மின்வயரில்சிக்கிய மரக்கிளையை மீட்டார்.
மின் கம்பத்தில் இருந்து செல்லும் 3 வயர்களில் ஒரு வயரில் கால்களை ஊன்றியும் மற்றொரு மின்கம்பியைக் கைகளால் பிடித்தபடியும் கம்பி வழியாக உயிரைப் பணயம் வைத்துத் துணிச்சலாகச் சென்று அந்த மரக்கிளையை அகற்றிவிட்டு மீண்டும் மின்கம்பம் வழியே தரையிறங்கினார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த ஆபத்தான பணியை மேற்கொண்ட மின்துறை ஊழியரை முதலமைச்சர் நாராயணசாமி பாராட்டினார்.