மும்பை:
மும்பையில் பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருள், ரூ.5 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் அங்கு பாதிக்கப்பட்டுள்ள பாலியல் தொழிலாளர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று அங்குள்ள சமூக நல அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. மேலும் அரசுசாரா அமைப்புகள் மூலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்நிலையில் பாலியல் தொழிலாளர் ஒவ்வொருவருக்கும் மாதம்தோறும் ரேஷனில் 3 கிலோ கோதுமை, 2 கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்கள், ரூ.5 ஆயிரம் ரொக்கம் வழங்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது. மேலும் பள்ளிக்கு செல்லும் பாலியல் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.2,500 உதவி வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
மும்பையிலுள்ள தர்பார் மஹிளா கமிட்டி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்தே அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்களிடம் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் இல்லாதபோதிலும் உதவிகளை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து பாலியல் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கு, ஆதார் அட்டை விவரங்களை அரசு சேகரிக்கத் தொடங்கியுள்ளது.