பாட்னா: பீகாரில் எதிர்க்கட்சியின் கடும் அமளிக்கு இடையே பாஜகவின் விஜய் சின்கா சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

பீகார் மாநிலத்தில் அண்மையில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்து இருக்கிறது. இந் நிலையில், முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது.

தேர்தலை இடைக்கால சபாநாயகர் ஜித்தன் ராம் மஞ்சி நடத்தினார். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜகவின் விஜய் குமார் சின்காவும், எதிர்க்கட்சிகளின் சார்பில் அவாத் பிகாரி சவுத்ரியும் போட்டியிட்டனர்.

வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலவை உறுப்பினர்கள் அவையில் இருந்ததை காரணம் காட்டி, குரல் வாக்கெடுப்பு நடத்த அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வேறு அவையைச் சேர்ந்தவர்கள் அவையில் இருக்கக் கூடாது என்று கூறி அது தொடர்பான விதிகள் அடங்கிய புத்தகத்தை காட்டி முழக்கம் எழுப்பினர். விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என்று தேஜஸ்வி யாதவ் வலியுறுத்த, அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.

கடும் அமளிக்கு இடையே வாக்கெடுப்பு நடத்தப்பட, பாஜக வேட்பாளர் விஜய் குமார் சின்கா 126 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். எதிர்க்கட்சி வேட்பாளர் அவாத் பிகாரி சவுத்ரி 114 வாக்குகள் பெற்றார்.