மாஸ்கோ: ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பு மருந்து 95% வெற்றி அடைந்து உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
உலகநாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகளில் பல நாடுகள் களம் இறங்கி இருக்கின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, இந்தியா, ரஷ்யா என பல நாடுகள் தீவிர ஆராய்ச்சியில் இறங்கி உள்ளன.
அவற்றில் முன்னதாக அமெரிக்காவின் பிபைசர், மாடர்னா மற்றும் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் தடுப்பு மருந்துகள் பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. கிட்டத்தட்ட 95% வரை வெற்றி இலக்கை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில் ஸ்புட்னிக் வி என்ற கொரோனா தடுப்பு மருந்து 95% வெற்றியடைந்துள்ளதாக ரஷ்யா கூறி உள்ளது. ஸ்புட்னிக் இறுதிகட்ட பரிசோதனையின் 2வது இடைக்கால பரிசோதனை முடிவுகளை ரஷ்யா வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் தடுப்பு மருந்தின் முதல் டோஸ் செலுத்தப்பட்ட 28 நாட்கள் இடைவெளியில் 91.4% செயல் திறன் கொண்டதாக உள்ளதாக ரஷ்யா கூறி உள்ளது. 48 நாட்கள் இடைவெளியில் தடுப்பு மருந்தின் செயல்திறன் 95% ஆக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.