மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியை எப்போது துவங்குவது என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் நிர்வாக தலைவர் கிரேக் டிலே.
அப்போட்டித் தொடரானது, வழக்கமாக நடைபெறும் ஜனவரி மாதத்திலிருந்து தள்ளி வைக்கப்படலாம் என்று கூறப்படும் நிலையில், இவ்வாறு தெரிவித்துள்ளார் கிரேக் டிலே.
டிசம்பர் மாத மத்தியிலிருந்தே, பங்கேற்கும் வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வர வேண்டுமெனவும், அப்போதுதான் 14 நாள் தனிமைப்படுத்தல் முடிந்து, அவர்கள் போட்டியில் பங்கேற்க முடியும் என்றும் அவர் நம்புவதாக கூறப்படுகிறது.
ஆனால், மெல்போர்ன் நகரம், கொரோனா முடக்கத்திற்கு பிறகு, தற்போதுதான் இயல்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்று கூறப்படுவதால், அனைத்தும் சந்தேகமாக உள்ளது.
ஆனால், வழக்கமான காலத்தைவிட போட்டி தாமதமானால், இதர டென்னிஸ் போட்டிகளை உரிய காலத்தில் நடத்துவது இயலாத காரியமாகிவிடும் என்றும் கூறப்படுகிறது. மேலும், தனிமைப்படுத்தும் காலத்தில், பயிற்சியில் பங்கேற்க வீரர்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்ற சந்தேகமும் உள்ளது.
அதேசமயம், இதுகுறித்த முடிவை விரைவில் மேற்கொள்வதற்கு, எங்களாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்றுள்ளார் டிலே.