லக்னோ :
சமாஜ்வாதி கட்சி நிறுவனரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்-அமைச்சருமான முலாயம் சிங் யாதவ், கொரோனா பரவல் ஆரம்பித்த மார்ச், மாத வாக்கில் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பிறகு கடந்த எட்டு மாதங்களாக அவர் வீட்டிலேயே முடங்கி கிடந்தார்.
இந்த நிலையில் தனது 83 வது பிறந்த நாளை முன்னிட்டு முலாயம் சிங், லக்னோவில் உள்ள சமாஜ்வாதி கட்சி அலுவலகத்துக்கு நேற்று வருகை தந்தார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு காண்பதால் முலாயம் சிங்கை வாழ்த்தி அவரது வீட்டில் இருந்து கட்சி அலுவலகம் வரை தெருவெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
கட்சி அலுவலகம் வந்த முலாயம் சிங் யாதவுக்கு மேள தாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
கட்சி அலுவலகத்தில் ’கேக்’ வெட்டி அவரது பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அவரது மகனும், முன்னாள் முதல்-அமைச்சருமான அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார்.
முலாயம் சிங் பிறந்த நாளை யொட்டி அவருக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத், தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“நீங்கள் (முலாயம் சிங்) நீண்ட நாட்களுக்கு பூரண உடல் நலத்துடன் வாழ ராமபிரானை பிரார்த்திக்கிறேன்” என அந்த வாழ்த்து செய்தியில் ஆதித்ய நாத் குறிப்பிட்டுள்ளார்.
– பா. பாரதி