டெல்லி: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் வரும் 25ம் தேதி புயலாக மாறி மாமல்லபுரம் – காரைக்கால் இடையே புயல் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 28ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த 2 வாரங்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை கொட்டியது. ஆனால் 2, 3 நாட்களாக மழை நின்று வெயில் வாட்டியது.
இந்நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் வரும் 25ம் தேதி புயலாக மாறி மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி, தற்போது அது ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் ஒட்டி பகுதிகளில் நிலை கொண்டுள்ளது என்று கூறி உள்ளது.
இது குறித்து இந்திய வானிலை மையம் மேலும் கூறி இருப்பதாவது: அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும். தற்போது, சென்னைக்கு கிழக்கே 1,000 கி.மீட்டர் தூரத்தில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு நோக்கி நகர்கிறது.
25ம் தேதி புயல் மாமல்லபுரம்-காரைக்காலை நெருங்குவதால் 75 முதல் 100 கி.மீட்டர் வேகத்தில் புயல் வீசும். அன்றைய தமிழகத்தில் தீவிர கனமழை பெய்யும் என்றும் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.