ண்டிகர்

வேளான் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் நடத்தும் ரயில் மறியல் போராட்டம் நாளை முதல் 15 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட உள்ளது.

மத்திய பாஜக அரசு நிறைவேற்றி உள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் தொடர்ந்து எதிர்ப்பு நிலவி வருகிறது.   விவசாயிகள், எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் எனப் பல தரப்பினரும் இந்த சட்டங்களை திரும்பப் பெற அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர்.  ஆனால் அரசு அந்த கோரிக்கைகளை ஏற்காமல் பிடிவாதமாக இருந்து வருகிறது.

இதையொட்டி விவசாயிகள் நாடெங்கும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  பஞ்சாப் மாநில விவசாயிகள் கடந்த ஒரு மாதத்துக்கும் அதிகமாக ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.   இந்த போராட்டத்தில் சரக்கு மற்றும் பயணிகள் ரயில்கள் இயக்கப்படவில்லை.  அம்மாநிலத்தின் பொருளாதாரம் வெகுவாக பாதிப்பு அடைந்துள்ளது.

எனவே பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் விவசாய அமைப்புக்களுடன் சில நாட்களாகப் பேச்சு வார்த்தை நடத்தி வந்தார்.  நேற்று நடந்த பேச்சு வார்த்தையில் ரயில் மறியல் போராட்டத்தை நாளை முதல் 15 நாட்களுக்கு நிறுத்தி வைக்க விவசாய அமைப்புக்கள் ஒப்புக் கொண்டன.  இந்த 15 நாட்களுக்குள் மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தாவிட்டால் மீண்டும் போராட்டம் தொடங்கப்படும் என அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.