பெங்களூரு: 4ஆண்டு சிறைவாசத்தின்போது சிறையில் சசிகலாவின் சிறை நடவடிக்கைகள் ஒருபுறம் விமர்சனத்துக்கு உள்ளானாலும், அவர் விவசாயியாக மாறி அங்கு பப்பாளித் தோட்டத்தை உருவாக்கி உள்ளதாகவும், மேலும் பல கைவினைப்பொருட்கள் தயாரிப்பு குறித்து கற்றறிந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைதண்டனை தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா தோழியான சசிகலா  பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில்  தண்டனை அனுபவித்துவருகிறார்.  தமிழக அரசியல் களத்தில் சசிகலாவின் விடுதலை பேசுபொருளாக இருப்பதால், அவரது விடுதலை குறித்து அவ்வப்போது விவாதங்கள் எழுந்து வருகின்றன.

சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றம் சசிகலாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியிருக்கிறது. அவர் கடந்த 15.2.2017-ம் தேதியிலிருந்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்துவருகிறார். 14.2.2021-ம் தேதியோடு நான்கு ஆண்டுகள் முடிவு பெறுகிறது.

இதற்கிடையில் 6.10.2017 முதல் 12.10.2017 என5 நாள்களும், 20.3.2018 முதல் 31.3.2018 என 12 நாள்களும் பரோலில் இருமுறை 17 நாள்கள் வெளியே வந்திருக்கிறார். பரோல் நாள்களைச் சேர்த்தால் சசிகலா மார்ச் 3-2021-ல் வெளியே வரக்கூடும். ஏற்கெனவே இந்த வழக்கில் சசிகலா 35 நாள்கள் சிறைத் தண்டனை அனுபவித்திருக்கிறார். 2021 மார்ச் 3-ம் தேதியிலிருந்து 35 நாள்களைக் கழித்தால் 27.1.2021-ம் தேதி விடுதலையாகி வெளியே வருவார். ஊழல் வழக்கில் தண்டனை அனுபவிப்பவர்களுக்கு ஒரு நாள்கூட விடுமுறை இல்லை’ என சிறைத்துறை ஆர்டிஐ தகவலில் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு அவர் செலுத்த வேண்டிய அபராதத்தொகையான ரூ.10.10 கோடியும் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டுவிட்டது. இதனால், அவர் எந்த நேரத்திலும் விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சசிகலா தனது சிறைவாசத்தின்போது பல்வேறு பணிகளை ஆற்றியதாக சிறைத்துறை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சிறையில் உள்ள வயது வந்தோருக்கான கல்வி திட்டத்தின் கீழ் நடைபெறும் வகுப்புகளில் கலந்து கொண்டு கன்னடம் பயில தொடங்கியபின் தற்போது கன்னட மொழி பேசுவதுடன், கன்னடத்தில் பிறர் பேசுவதையும் புரிந்துகொள்ளவும் செய்கிறார். 

சிறையில் நடத்தப்பட்டு வரும் கம்ப்யூட்டர் பயிற்சியும் மேற்கொண்டு, கம்ப்யூட்டர், லேப்டாப் இயக்கவும் பழகியிருக்கிறார்.

விவசாயியாக மாறி,  அங்குள்ள தோட்டத்தில் அரை ஏக்கரில் பப்பாளி மரங்கள் பயிரிட்டு வளர்த்திருக்கிறார். அவை நல்ல மகசூல்களை தந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி அணிகலன்கள், கலைப்பொருட்கள், துணிப்பைகள் தயாரிப்பு போன்ற கைவினைப்பொருட்கள் செய்வது தொடர்பாக கற்றுக்கொண்டு அதை தயாரிக்கும்  பணிகளிலும் ஈடுபட்டதாகவும், மேலும் பல்வேறு பணிகளும் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக சசிகலாவுக்கு சிறைத்துறை ஏராளமான சலுகைகளை வழங்கியதாக ரூபா ஐபிஎஸ் குற்றம் சாட்டியிருந்தார்,  அவரது குற்றச்சாட்டில், பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு விதிகளை மீறி 5 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. சிறையில் சமைத்து சாப்பிடும் வகையில் விதிகளை மீறி, அவர்  சமைப்பதற்காக பிரஷர் குக்கர், மஞ்சள்தூள் உள்ளிட்ட பொருட்களும் இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆடை மற்றும் பார்வையாளர் சந்திக்கும் விவகாரத்திலும் விதிகள் மீறப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிறை அறையிலும் 4 கைதிகள் இருக்கக் கூடிய நிலையில் சசிகலா, இளவரசிக்கு மட்டும் 5 தனி அறைகள் ஒதுக்கப்பட்டு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.  சசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்ததுகுறிப்பிடத்தக்கது.