சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இன்று மதியம் தமிழகம் வர இருக்கும் நிலையில், சென்னை விமான நிலையம் முதல் கலைவாணர் அரங்கம் வரை பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக சென்னை காவல்ஆணையர் தெரிவித்து உள்ளார்.
2 நாள் பயணமாக தமிழகம் வரும் அமித்ஷா பல்வேறுஅரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
அமித்ஷா தமிழக பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 1.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் அவர், கத்திப்பாரா, கிண்டி, ஆளுநர் மாளிகை, அடையார் வழியாக லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலை 1.55-க்கு அடைகிறார்.
பின்னர், மாலை 4.25-க்கு புறப்பட்டு வாலஜா சாலையில் அமைந்துள்ள கலைவாணர் அரங்கத்திற்கு செல்கிறார். அங்கு எம்.ஜி.அர், ஜெயலலிதாவிற்கு மரியாதை செலுத்தும் நிகழ்வும், ரூ.1,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
அதன்பின்னர், மாலை 6.00 மணிக்கு மீண்டும் லீலா பேலஸ் வருகிறார். அங்கு இரவு 7 மணிக்கு தமிழக பா.ஜ.க. மாநில, மாவட்ட நிர்வாகிகளையும், பல்வேறு அணிகளின் தலைவர்களையும் அமித்ஷா சந்தித்து பேசுகிறார். இரவு 8.30 மணிக்கு பா.ஜ.க. உயர்மட்டக் குழுவினருடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.
அன்று இரவு ஓட்டலில் தங்கும் அவர், மறுநாள் (22-ந்தேதி) காலை 10 மணியளவில் அங்கிருந்து காரில் புறப்பட்டு விமான நிலையம் செல்கிறார். காலை 10.15 மணிக்கு தனி விமானத்தில் மத்திய மந்திரி அமித்ஷா டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
அமித்ஷா வருகையையொட்டி சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சென்னை விமான நிலையம் முதல், கவர்னர் மாளிகை, அவர் தங்கும் லீலா பேலஸ் ஓட்டல் உள்பட அனைத்து பகுதிகளிலும் 5அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் விமான நிலையத்தில் இருந்து கலைவாணர் அரங்கம் வரை அவர் செல்லும் பாதைகளில் 10அடிக்கு ஒரு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பாதுகாப்பு பணிகளை காவல்ஆணையர் நேரடியாக கவனித்து வருகிறார்.