வடோதரா
கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த வடோதரா, ராஜ்கோட், சூரத் நகரங்களில் நாளை முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் கொரோனா பரவுதல் அதிகரித்து வருகிறது. இன்று குஜராத் மாநிலத்தில் 1,420 பேர் பாதிக்கப்பட்டு இதுவரை 1,94,402 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 7 பேர் உயிரிழந்து 3837 பேர் இதுவரை மரணம் அடைந்துள்ளனர். தற்போது 12,950 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதையொட்டி இன்று முதல் அகமதாபாத் நகரில் இரவு ஒன்பது மணி வரையில் இருந்து நவம்பர் 23 ஆம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு இரவு மட்டும் அதாவது இரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
மேலும் மாநிலம் முழுவதும் வரும் 23 ஆம் தேதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க இருந்தது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று குஜராத் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி நாளை முதல் முக்கிய நகரங்களான வடோதரா, சூரத் மற்றும் ராஜ்கோட் நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை அமலில் இருக்கும்.