உறவுகள் – கவிதை பகுதி 8
வாழும் தெய்வங்கள் !
பா. தேவிமயில் குமார்
அவனுக்குள்ளும்
எத்தனை
ஆசைகளோ ?
என்னென்னத்
தேவைகளோ ?
தேடுகிறான்….
குனிந்தபடியே
குப்பைமேட்டில்
தன் வாழ்க்கையை !
மலம் அள்ளும்
மனிதனின்
மனக்குமுறலை
ஒரு நொடி
நினைத்துப் பாருங்கள் !
மூக்கைப் பொத்தியும்
முகத்தைத் திருப்பியும்
செல்கிறோம் !
அவனும்…..
மனிதன் என
மறக்காதீர்கள் !
அம்மா !
அய்யா !
குப்பை இருக்கா ?
கொண்டு வாங்க !
என குரல் கொடுக்கும்
துப்புரவுத்
தொழிலாளியுடன்
பத்து நிமிடம்
நின்று
பேசியிருப்போமா ?
யோசித்துப் பாருங்கள் !
சாக்கடை
அள்ளும் மனிதன்…
அவனுக்கும்
நாற்றமென்பது
நாற்றம்தான் !
ஆனாலும்
அவன்
உயிர் பிழைக்க
அள்ளுகிறான் !
அங்கே
அடைபட்டது
சாக்கடை
மட்டுமல்ல,
மனிதமும் தான் !
கடவுள் என்பவர்
கற்பனை தானோ ?
என
எண்ண
வைக்கிறது
இவர்களின் நிலை !
அன்றாடம்
இவர்களைக்
கடந்தபடியே
காலம் ஓடுகிறது !
காலம் மட்டுமா ?
நாமும் தான் !
நிஜமான
நரகத்தை
அனுபவிக்கும்
அப்பெருமக்களின்
வேதனையை
உணராத நாம்
சொர்க்கம்,
நரகம் பற்றி
தர்க்கம் செய்கிறோம் !
திருவிழா,
தேர்தல்,
பருவமாற்றம்,
இயற்கை சீற்றம்
என, எது
வந்தாலும்
உதவுபவர்கள்
இவர்களே !
ஆனாலும்
உதாசீனப்படுத்துகிறோம் !
ஊர்
உலகமெல்லாம்
சுத்தம்
செய்யும் இவர்களுக்கு
“சுத்தம் சோறு”
போடுமா ? என
தெரியவில்லை !
இவர்களின்
துயரத்தினை
என்று
உணர்கிறோமோ
அன்றே
உயிர்பெறும்
“மனிதம்”
எனவே !
அடுத்த முறை
அவர்களைப்
பார்க்கும்போது ஒரு
புன்னகையை
பரிமாறுங்கள் !
கை கூப்பி
வாழ்த்திடுங்கள்
வணங்கிடுங்கள் !
வாழும் தெய்வங்களவர்கள் !
இப்படிக்கு
துப்புரவுத் தொழிலாளர்களின்
துயர் அறிந்த ஒரு
சாதாரண மனிதன்