சென்னை
சென்னை வீடுகளில் நிலத்தடி நீர் மற்றும் மழை அளவை அளக்கும் கருவிகளைக் குடிநீர் வாரியம் அமைத்து வருகிறது.
சென்னை நகரில் மழை அளவு அதிகரித்ததுடன் மழை நீர் சேகரிப்பும் அதிகரித்துள்ளது. எனவே நகரின் பல இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது. தற்போது நகரெங்கும் சுமார் 9 லட்சம் மழைநீர் சேகரிப்பு அமைப்புக்கள் உள்ளதால் நிலத்தடி நீர் மட்டம் மேலும் அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
சென்னை குடிநீர் வாரியம் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரே அளவு நீரை வழங்கி வருகிறது. ஆனால் நிலத்தடி நீர் மட்டம் குறையும் போது வாரியம் வழங்கும் நீர் அங்குள்ள மக்களுக்குப் பற்றாமல் போகும் நிலை ஏற்படுகிறது. இந்த பிரச்சினையைத் தீர்க்க சென்னை குடிநீர் வாரியம் ஒரு கருவியை வீடுகளில் பொருத்தி வருகிறது. இந்த கருவிகள் பொருத்தும் பணி 90% வரை நிறைவு பெற்றுள்ளது.
இந்த கருவிகள் மூலம் குறிப்பிட்ட பகுதிகளில் பெய்யும் மழையின் அளவும் நிலத்தடி நீர் மட்டமும் ஆன்லைன் மூலம் குடிநீர் வாரிய கணினியில் பதிவாகும். இதைக் கொண்டு சென்னை நகர வாசிகள் தங்கள் பகுதிகளில் பெய்துள்ள மழையின் அளவை மட்டுமின்றி நிலத்தடி நீர் மட்டத்தையும் ஆன்லைன் மூலம் அறிந்துக் கொள்ள முடியும். இதைக் கொண்டு அரசு மழைநீர் சேகரிப்பு அளவு குறித்து அறிய முடியும்.
குறிப்பாகச் சென்னை குடிநீர் வாரியம் இந்த நிலத்தடி நீர் மட்ட அளவை பொறுத்து ஒவ்வொரு பகுதிக்கும் நீர் வழங்க முடியும். தற்போது தேனாம்பேட்டை, ராயபுரம், சோழிங்கநல்லூரில் நிலத்தடி நீர் மட்டம் உயரவில்லை. மற்ற பகுதிகளில் பெருமளவு உயர்ந்துள்ளது. அண்ணாநகர் பகுதி சென்ற மாதத்தை விட தற்போது 0.92 மீட்டர் அளவுக்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.