மைசூரு: கர்நாடகத்தில், ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி சமூகத்தவருக்கு முடி திருத்தம் செய்ததற்காக, மல்லிகார்ஜூன் ஷெட்டி என்பவர், நாயக் ஜாதிக்காரர்களால் ஊர் விலக்கம் செய்யப்பட்டுள்ளார் மற்றும் அவருக்கு ரூ.50000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது 47 வயதாகும் அந்த முடிதிருத்துனர், மைசூரு மாவட்டத்தின் நன்ஜன்குட் தாலுகாவில், ஹல்லாரா கிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது கடைக்கு வந்த ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி சமூகத்தவருக்கு முடிதிருத்தம் செய்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, இவரின் கடைக்குச் சென்ற, இவரது கிராமத்தின் நாயக் சமூகத்தைச் சேர்ந்த மகாதேவா நாயக், சங்கரா மற்றும் சிவராஜு உள்ளிட்டோர், இவர், மேற்கண்ட சமூகத்தைச் சேர்ந்த நபர்களுக்கு முடி திருத்தினாரா? என்று கேட்டனர்.
தான், யாருக்கு ஜாதி பார்ப்பதில்லை என்பதாக பதிலளித்த மல்லிகார்ஜூனிடம், தாங்கள் சொல்வதைக் கேட்கவில்லை என்றால், வியாபாரத்தை இழக்க நேரிடும் என்று எச்சரிக்க விடுத்ததோடு, அவர் ரூ.50000 அபராதம் செலுத்த வேண்டுமெனவும் கூறினர்.
மேலும், இனிமேல் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வந்தால், அவர்களிடம் முடிவெட்ட ரூ.300ம், முகம் மழிக்க ரூ.200ம் வசூலிக்க வேண்டுமென நிபந்தனை விதித்தனர். ஆனால், இதற்கு உடன்பட மறுத்துவிட்டார் மல்லிகார்ஜூன். எனவே, அவர்மீது ஊர்விலக்க நடவடிக்கையை அறிவித்ததோடு, அவரின் கடைக்கு யாரும் முடிதிருத்த செல்லக்கூடாது என்றும் ஊருக்குள் பிரச்சாரம் செய்தனர் மகாதேவ நாயக் உள்ளிட்டோர்.
கடந்த 3 மாதங்களாகவே, அவர்களின் நெருக்கடி தொடர்ந்து வருவதாக கூறுகிறார் மல்லிகார்ஜுன். மேலும், இதுதொடர்பாக காவல்துறையிலும் புகாரளித்துவிட்டார் அவர். காவல்துறையினர் ஹல்லாரா கிராமத்திற்கு வந்து, சம்பந்தப்பட்டவர்களை எச்சரித்து சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், மல்லிகார்ஜூனின் 21 வயது மகனை வீட்டிலிருந்து கடத்திச் சென்று, அவருக்கு வலுக்கட்டாயமாக ஆல்கஹாலை ஊற்றிவிட்டு, அவரை நிர்வாணமாக்கி படம்பிடித்து, நாயக் சமூகத்தைப் பற்றி கேவலமாக பேசுமாறு செய்து, அதை வீடியோவும் பிடித்தனர். இதன்மூலம், தான் காவல்துறையிடம் சென்றால், அந்த வீடியோவை வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டினர் என்றுள்ளார் அவர். மேலும், அவர்களின் அத்துமீறல்களிலிருந்து விடுபட வேண்டுமெனில், மல்லிகார்ஜுன், ரூ.5000 செலுத்த வேண்டுமென்றும் மிரட்டுவதாக கூறுகிறார் மல்லிகார்ஜுன்.
தான் இதுகுறித்து, தாசில்தாரிடம் புகாரளித்தும் அவர் நடவடிக்கை எடுக்காத காரணத்தால், மீடியாவின் கவனத்திற்கு இதைக் கொண்டுவந்ததாய் கூறுகிறார் நாகார்ஜுன்.