சென்னை

ஷ்யத் தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி மறைவுக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய நாட்டவரான அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி மாஸ்கோ தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்துள்ளார்.   அவரது மாணவர்கள் பலர் தற்போது ஊடகம் மற்றும் கல்வித்துறையில் திறம்பட பணியாற்றி வருகின்றனர்.   பிரபல தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன். தமிழறிஞர் சிவத்தம்பி, பாடலாசிரியர் வைரமுத்து ஆகியோர் இவருடைய நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள்.

சோவியத் யூனியன் உடைந்த பிறகு தமிழ் கற்பதில் ஏற்பட்ட தொய்வை துப்யான்ஸ்கி சரி செய்து மீண்டும் தமிழ் கற்பதை ஊக்கப்படுத்தி பணியாற்ரி உள்ளார்.   அது மட்டுமின்றி தமிழக இசையிலும் அவர் மிகவும் விருப்பம் கொண்டுள்ளார். சேலத்தில் உள்ள பாரதியார் சிலையை அவர் திறந்து வைத்துள்ளார்.

கொரோனா தாக்கம் காரணமாக அவர் மாஸ்கோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  சிகிச்சை பலனின்றி அவர் செவ்வாய்க்கிழமை அன்று மரணம் அடைந்தார்.  அவரது மறைவுக்கு உலகெங்கிலும் இருந்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது டிவிட்டரில், “ரஷ்ய நாட்டுத் தமிழறிஞர் – பேராசிரியர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி மறைவு பேரிழப்பு. ரஷ்யப் பல்கலைக்கழகங்களில் தமிழ் பயிற்றுவித்த துப்யான்ஸ்கி வாயிலாகத் தமிழ் அறிந்த மேல் நாட்டவர் ஏராளம். செம்மொழி மாநாட்டில் தொல்காப்பியம் குறித்த ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்தவர்! ஆழ்ந்த இரங்கல்!” எனப் பதிவு இட்டுள்ளார்.