டெல்லி: கொரோனாவால் நாடு தவித்துக்கொண்டிருக்க இருபதாயிரம் கோடியில் புதிய நாடாளுமன்றம் தேவையா? என மதுரை நாடாளுமன்ற தொகுதி எம்.பி. வெங்டேசன் வேதனை தெரிவித்து உள்ளார்.
டெல்லியில் நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. ரூ.861.90 கோடியில் புதிய நாடாளுமன்ற வளாகம் அமைய உள்ளது. இதற்கான பணிகளை டாட்டா குழுமம் செய்து வருகிறது. தற்போது நாடு கொரோனா பாதிப்பு காரணமாக கடுமையான நிதிச்சூழலில் சிக்கி உள்ள நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் தேவையா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், மோடி அரசு விடாப்பிடியாக புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான பணிகளை தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், நிலைக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்ற மதுரை எம்.பி. வெங்கடேசன், நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்று வரும் புதிய கட்டிட பணிகளைக் கண்டும், அங்குள்ள காந்தி சிலை, மணல்மேடுகளால் பாதியளவு மூடப்பட்டுள்ளதைப் பார்த்து, வேதனையுடன் டிவிட் பதிவிட்டுள்ளார்.
அதில், இராஜவீதியும் பொருளாதார வீழ்ச்சியும் நிலைக்குழுக் கூட்டத்துக்காக இன்று நாடாளுமன்றத்துக்கு வந்தேன். அண்ணல் காந்தி சிலைக்கு முன்னால் பில்லர்கள் போடுவதற்கான வேலைகள் தொடக்கப்பட்டிருந்தன. பக்கத்தில் பெருங்குழியைத் தோண்டிக் குவித்த மண்மேடு.
கொரனாவின் இரண்டாவது அலையைச் சமாளிக்க உலக நாடுகள் தங்களை தயார்படுத்திக்கொண்டுள்ள இந்த நேரத்தில், கொனோராவால் நாடு பொருளாதாரப் பெருவீழ்ச்சியாலும் மக்கள் தமது வாழ்வாதார இழப்புகளாலும் தவித்துக்கொண்டிருக்கும் இந்தச் சோதனை மிகுந்த நேரத்தில், இருபதாயிரம் கோடியில் புதிய நாடாளுமன்றம் உள்ளிட்ட புதிய ராஜவீதியை கட்டியெழுப்பத் தொடங்கியுள்ளது மோடி அரசு.
“எனது தேசம் இதையும் கடந்து பயணிக்கும் ஆற்றலைக் கொண்டது” என்று அண்ணலின் அடிவாரத்தில் நின்றபடி சொல்லிக்கொண்டேன். அவரின் மெளனத்துக்குள் இருக்கும் அறத்தின் உறுதியை இந்தத் தேசம் இறுகப்பற்றட்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.