பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையான ரூ.10கோடியே 10 லட்சத்தை அவரது உறவினர்கள் இன்று பெங்களூரு தனி நீதிமன்றத்தில் செலுத்தினர். அதன் விவரம் வெளியாகி உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியாக இருந்து, தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை குவித்து வந்தவர் சசிகலா. இது தொடர்பாக ஜெயலலிதா மற்றும் சசிகலா, அவரது குடும்பத்தினர் மீது தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேருக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற ஜெயலலிதாவுக்கு, உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதுடன், சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுக்கும் தடை விதித்து. இந்த வழக்கை மீண்டும்உச்சநீதிமன்றம் விசாரித்த நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையில், ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து, சொத்துக்குவிப்பு வழக்கில், சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. ஜெயலலிதா இறந்து விட்ட நிலையில், சசிகலா உள்பட 3 பேர் கடந்த 2017ம் ஆண்டு முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் சிறை தண்டனை வரும் ஜனவரியுடன் முடிவடைய உள்ளதால், அவர்கள் செலுத்த வேண்டிய அபராதத் தொகையை செலுத்த அறிவுறுத்தப்பட்டது. அபராதம் கட்டத்தவறினால், நீதிமன்ற உத்தரவுபடி, மேலும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதையடுத்து சசிகலா சார்பில் ரூ. 10 கோடியே 10ஆயிரம் அபராத தொகை பெங்களூரு தனி நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது. நீதிபதி சிவப்பாவிடம் நவம்பர் 15 மாலை சசிகலா சார்பாக அவரது வழக்கறிஞர் சி.முத்துகுமார் வழங்கியதாகவும், அவருடன் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் உடனிருந்ததாகவும் தகவல் வெளியானது. அதைத்தொடர்ந்து, அடுத்த வாரம் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கான அபராத தொகை செலுத்தப்படும் என்று மன்னார்குடி வட்டார தகவல்கள் தெரிவிக்கினற்ன.
இந்த நிலையில், சசிகலாவுக்காக 10 கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு வங்கி வரைவோலை எடுத்தவர்களின் விவரம் வெளியாகி உள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியில் பழனிவேல் என்பவர் ரூ.3.25 கோடி வரைவோலை எடுத்துள்ளார்.
வசந்தா தேவி என்பவர் சார்பில் ரூ.3.75 கோடி டி.டி. எடுக்கப்பட்டுள்ளது.
ஹேமா என்பவர் ஆக்சிஸ் வங்கியில் 3 கோடி ரூபாய்க்கு டி.டி. எடுத்து வழங்கியுள்ளார்.
விவேக் பெயரில் ஆக்சிஸ் வங்கியில் ரூ.100.000-க்கு டி.டி. எடுக்கப்பட்டுள்ளது.
சசிகலா வரும் ஜனவரி 27ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று பெங்களூரு சிறை நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில், தற்போது அபராதத்தொகையும் கடடப்பட்டுள்ளதால், சசிகலா விரைவில் சிறையில் விடுதலை செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.