தலைவாசல் படியில் செய்யக்கூடாதவை என்ன தெரியுமா?
தலைவாசல் கதவில் குலதெய்வம் வாசம் செய்யுமாம்! அதனால் தவறியும் அங்கு இதையெல்லாம் செய்து விடாதீர்கள்.
ஒரு வீட்டின் தலைவாசலில் அஷ்டலக்ஷ்மியும் வாசம் செய்வது போல, தலைவாசல் கதவில் குலதெய்வம் குடியிருப்பதாகச் சாஸ்திரங்கள் கூறப்படுகிறது. உங்களுடைய குலதெய்வம் உங்கள் வீட்டின் கதவில் தான் குடியிருக்கும். அதனால் தான் நம் முன்னோர்கள் வீட்டின் கதவைச் சத்தமில்லாமல் திறக்கவும், மூடவும் கூறுவார்கள். அடிக்கடி தேங்காய் எண்ணெய் விட்டு சுலபமாக மூடும்படி வைத்திருப்பார்கள். குழந்தைகள் கதவின் தாழ்ப்பாளை ஆட்டும் பொழுது பெரியவர்கள் அதட்டுவதை நாம் கேட்டிருப்போம். இவளோ ஏன்! நாமே கூட அந்த தவற்றைச் செய்து விட்டுப் பல முறை சிறு வயதில் திட்டு வாங்கி இருப்போம்
அதற்கு இது தான் காரணம். வீட்டின் கதவில் நம்முடைய குலதெய்வம் வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. இத்தகைய நில வாசல் கதவில் தெரியாமல் கூட நாம் இந்த தவறுகளை எல்லாம் எப்போதும் செய்து விடக் கூடாது. அப்படியான தவறுகள் என்னென்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்
வீட்டின் தலை வாசலில் இருபுறங்களிலும் விளக்கு ஏற்றி வைப்பது பண்டைய கால வழக்கமாக நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அந்த இரண்டு புறங்களிலும் கும்ப தேவதைகள் அமர்ந்திருப்பதாகச் சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த தேவதைகளைக் குளிர்விக்கவே அப்பகுதியில் விளக்கு ஏற்றி வைக்கப்பட்டது. அவர்களை வணங்குவதற்காகவே வீட்டின் தலைவாசலை குள்ளமாக வடிவமைத்து வைத்திருப்பார்கள். அந்த வீட்டில் குடியிருப்பவர்கள் வீட்டிற்குள் நுழையும் முன் கும்ப தேவதைகளை வணங்கிச் செல்லுவதற்குத் தான் இவ்வாறு உயரம் குறைவாக முந்தைய காலங்களில் கதவுகள் வடிவமைக்கப்பட்டன
அது போல எப்படி நம் கோவில்களில் வாசல் படியை மிதிக்காமல் தாண்டி உள்ளே செல்கிறோம்? அதே போல் தான் வீடு என்னும் கோவிலில் வாசல் படிகளை மிதித்து விட்டு உள்ளே செல்லக் கூடாது. படிகளுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு வழிபடுவதும் இந்த தேவதைகளுக்குத் தான். அத்தகைய தெய்வீக சக்தி வாய்ந்த இந்த நிலைவாசல் படியை மிதித்துக் கொண்டு உள்ளே செல்லக் கூடாது
அது போல் ஒருபோதும் நிலைவாசல் படியில் அமரக்கூடாது. ஒரு சிலர் பொழுது போகாமல் வீட்டின் தலைவாசல் பகுதியில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருப்பார்கள். இவை மிகவும் மோசமான பிரச்சனைகளை உங்களுக்குத் தரும். படியிலிருந்து இறங்கித் தான் நீங்கள் அமர்ந்து கதை பேச வேண்டும். அது போல் வாசல்படியில் தலை வைத்துப் படுக்கக் கூடாது என்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதுவும் இதற்காகத் தான்
வீட்டின் தலை வாசலில் மகாலட்சுமிகளும், கதவில் குலதெய்வமும் வாசம் செய்வதால் அந்த இடத்தில் தலை வைத்துப் படுக்கக்கூடாது, தரித்திரம் ஏற்படுத்தும் என்பார்கள். அது போல் தலைவாசலில் கால் வைத்து நிற்கக் கூடாது. அங்கு நின்று தும்முவது, தலை வாருவது போன்றவற்றைச் செய்தால் வீட்டில் தரித்திரம் தான் உண்டாகும். இது போன்ற சில தவறுகளை வீட்டில் செய்தால் பணவரவு கட்டாயம் தடைப்படும். கெட்ட சக்திகளும் உள்ளே நுழைவதற்கு வசதியாக அமைந்து விடும். இவ்வாறு தலைவாசலில் நாம் செய்வதால் வீட்டைப் பாதுகாக்கும் தெய்வங்கள் செயல்பட முடியாமல் போய்விடும்
கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர் நம்முடைய குலதெய்வம் தான். அதனால் தான் எப்போதும் நம் வீட்டின் கதவுகளில் குடியிருப்பதாகச் சாஸ்திரங்கள் கூறுகின்றன. சில சமயங்களில் நமக்குத் தெரியாமல் நாம் சில நேரங்களில் நமக்கு வரும் ஆபத்துக்கள் விலகியதை அடுத்து தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்று விட்டது என்று கூறுவோம். நம்முடைய பல கஷ்டங்களில் இருந்து குலதெய்வம் நம் துணையாக இருந்து பாதுகாப்பதாக ஆன்மீக சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே இதுவரை தெரியாமல் செய்திருந்தாலும்,
இனியும் தலைவாசலில் இந்த தவறுகளை நாம் செய்யாமல் இருப்பது தான் மிகவும் நல்லது வாழ்க வளத்துடன் நலத்துடன்.